100% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வனக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
மேட்டுப்பாளையம்: வனச்சரகர் பணிக்கான காலியிடங்களை, வனவியல் பட்டதாரிகளுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனவியல் பி.எஸ்.சி.,- எம்.எஸ்.சி., - எம்.பில்., பட்ட வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 52 மாணவிகள், 122 மாணவர்கள் படிக்கின்றனர். வேலை வாய்ப்பில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, இந்த மாணவர்கள், நேற்று வகுப்பை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்தனர். மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: வனச்சரகர் பணிக்கு வனவியல் பட்டதாரிகளை நியமிக்கக் கோரி, 2009ம் ஆண்டு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனவியல் மாணவர்களுக்கு, வனச்சரகர் நேரடி நியமனத்தில், 100 சதவீதம் இடஒதுக்கீடு செய்து, அரசாணை எண், 118, வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு, பழைய ஆணையை திருத்தம் செய்து, 2014ம் ஆண்டு, எண் 76ல் புதிய அரசாணையை வெளியிட்டது. அதில் வனவியல் பட்டதாரிகளின் 100 சதவீத இடஒதுக்கீடு, 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வகுப்பு மற்றும் தேர்வுகளை புறக்கணித்து தொடர் போராட்டம் செய்தோம். தமிழக அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில், கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு செய்வதாக கூறியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், வனவர் பணியிடங்களுக்கு அனைத்து பட்டதாரிகளும் தகுதி படைத்தவர்கள் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், வனவியல் படித்த எங்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை. வனச்சரகர் பணியிடங்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வனவர் பணியிடத்திற்கு, வனவியல் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் கூறினர்.