18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.கடந்த 2020ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், உரிய இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை அதே ஆண்டு விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறியிருந்தது.இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதி, 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பட்டியலை ரத்து செய்ததுடன் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி 4 வாரத்திற்குள் மாற்றியமைக்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும்'' என டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு பிறப்பித்தார்.