25 ஆயிரம் காகித பைகள் அசத்திய மாணவர்கள்
தாராபுரம்: தாராபுரத்தில், சர்வதேச காகித பை தினத்தை ஒட்டி, 25 ஆயிரம் காகித பைகளை செய்து, கடைகளுக்கு தந்த மாணவ, மாணவிகளின் செயல், மக்களை நெகிழச்செய்தது.சர்வதேச காகிதப்பை தினத்தன்று, அதன் அவசியம் குறித்து தாராபுரம் சமரச சுத்த சன்மார்க்க சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியம் பேசினார். விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வடுகநாதன் காகித பைகள் தருவதை துவக்கி வைத்தார். தொடர்ந்து தாராபுரம் அரோபிந்தோ பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுடன் சிறு, சிறு குழுவாக பிரிந்து நகரில் உள்ள அனைத்து வீதிகள், கடை கடையாக ஏறி, காகித பைகளை கொடுத்து நெகிழி உபயோகத்தை கைவிடுமாறு கூறினர். 25 ஆயிரம் காகித பைகளை, 500 மாணவ, மாணவியர் கொடுத்ததாக பள்ளி நிர்வாகிகள் கூறினர்.