2.5 கோடி ரூபாயில் அறிவுசார் மையம்
உப்பிலிபாளையம்: உப்பிலிபாளையம் அருகே ஆடீஸ் வீதியில், 2.5 கோடி ரூபாயில் நவீன நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் உருவாகி வருகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், உயர்கல்வி கற்க, போட்டித்தேர்வு எதிர்கொள்ள புத்தகங்கள் வாங்க முடியாமல், நுாலகங்களை தேடி அலைகின்றனர். அவர்கள் தேசிய அளவில் நடைபெறும், போட்டித் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் இந்த அறிவுசார் மையம் அளிக்க இருக்கிறது. இம்மையத்தில், 80 பேர் அமர்ந்து படிக்க ஏதுவாக நுாலக அறை, அலுவலக அறை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.மிக அரிய பொக்கிஷமாக, 10 ஆயிரம் புத்தகங்கள் தகவல் களஞ்சியமாக இடம்பெற இருக்கின்றன. இதற்கான அலமாரிகள் நீண்டு கொண்டே செல்கின்றன. தவிர, 42 பேருக்கு பயிற்சி அளிக்கஏதுவாக, பயிற்சி அறையும் கட்டப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் வசதியுடன், இ-கவர்னன்ஸ், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, சிறுவர், சிறுமியருக்கான செயல்திறன் அறை என, ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன.தவிர, அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள தமிழ், ஆங்கிலம் என நாளிதழ்கள் வாங்கவிருப்பது கூடுதல் அம்சம்.நேரு ஸ்டேடியத்தில் விளையாடும், பயிற்சி பெறும்வீரர்கள், காலை, மாலை வாக்கிங் செல்வோர் என சிறியவர் முதல் பெரியவர் வரை என, அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள அம்சமாக, இந்த அறிவுசார் மையம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.விரைவில் இம்மையம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.