3 லட்சம் பொறியாளர்கள் இந்தியா திரும்புவார்கள்
சர்வதேச வேலை வாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக வரும் 5 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் இந்திய பொறியாளர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் நிலை ஏற்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கெல்லி சர்வீசஸ் இந்தியா மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக 2011-15ம் ஆண்டிற்குள் வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பலர் திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறியுள்ளது. இந்தியர்கள் அதிகமாக பணியாற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனம் மற்றும் நிர்வாகங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது கெல்லி சர்வீசஸ் இந்தியா நிறுவனம். வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் வருமானம் கடந்த ஆண்டு 55 பில்லியனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் இதுபோன்ற நிரந்தரமற்ற பணிச் சூழல் கடந்த 2008ம் ஆண்டுகளில் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தியாவிலேயே கர்நாடகாவில் இருந்துதான் ஏராளமானோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அடுத்ததாக குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்திய பொறியாளர்கள் நாடு திரும்புவதை பொருளாதார பின்னடைவாக கருதாமல், இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும், மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும் கிடைத்த வாய்ப்பாக நினைத்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த அசாதாரண சூழ்நிலையையும் சமாளிக்க இயலும்.