5,000 நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவால், 5,000 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தங்கள் திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டை, தமிழக அரசும், தி.மு.க.,வும் கொண்டாடுகின்றன. இதில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை பண்பாட்டு துறை சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழாக்களில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புதல் பெற்றுள்ளது. அது, ஒவ்வொரு விழாவிலும், மூன்று கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் நடக்க உள்ள, 100 விழாக்களில், சராசரியாக தலா, 50 பேர் வீதம், 5,000 கலைஞர்களுக்கு, கலை பண்பாட்டுத் துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என, நாட்டுப்புற கலைஞர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.