உள்ளூர் செய்திகள்

7 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின், பி.எஸ்.எல்.வி., சி - 56 ராக்கெட் வாயிலாக நேற்று விண்ணில் ஏவப்பட்ட ஏழு சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள், பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக பிரிவான, என்.எஸ்.ஐ.எல்., எனப்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், தனியார் செயற்கைக்கோள்களை ஏவும் பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூர் அரசு மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த, எஸ்.டி., இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய, டி.எஸ்., - சார் எனும் புவிகண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.இதன்படி, ஆந்திரா வின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி - 56 ராக்கெட் வாயிலாக, இந்த செயற்கைக்கோள்கள் நேற்று காலை 6:31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன. புறப்பட்ட 23 நிமிடங்களில், பிரதான செயற்கைக்கோளான, 360 கிலோ எடை உடைய, டி.எஸ்., - சார் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. அதன் பின், ஆறு துணை செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக, பிரிந்து சென்றன. இந்த ஏழு செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. பி.எஸ்.எல்.வி., சி - 56 ராக்கெட், 145 அடி உயரமும், 278 டன் உந்துவிசை எடையும் உடையது.இதிலிருந்து ஏவப்பட்ட, டி.எஸ்., சார் செயற்கைக்கோள், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய செயற்கை துறை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் எனும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. இரவு, பகல் உட்பட அனைத்து விதமான பருவநிலையிலும் படங்களை துல்லியமாக எடுத்து அனுப்பும் திறன் உடையது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்