74 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 25% அட்மிஷன்கூட இல்லை!
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சிலிங் முடிவடைய இன்னமும் 3 நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் 6ம் தேதி நிலவரப்படி உள்ள புள்ளிவிவரம் இது. 25 பொறியியல் கல்லூரிகளில் நூறு சதவீத இடங்களும் பூர்த்தியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் இவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 99 சதவீதத்திற்கு மேல் இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 30. 104 பொறியியல் கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 260 கல்லூரிகளில் 50 சதவீதம் அளவுக்கு மேல் இடங்கள் பூர்த்தியாகியுள்ளன என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆகஸ்ட் 7ம் தேதியன்று மட்டும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட 5881 மாணவர்களில் 2852 மாணவர்கள் வரவில்லை. அதாவது கவுன்சிலிங் தொடங்கியதிலிருந்து இதுவரை 33,622 மாணவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 72,837 மாணவர்கள் ஒற்றைச்சாளர முறை மூலம் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றுள்ளனர். இன்னும் 36,842 இடங்கள் காலி உள்ளன. அடுத்த மூன்று நாட்களிலும் சில ஆயிரம் மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் இடங்களைப் பிடித்தாலும்கூட 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி.யில் ஆர்வம் இல்லை: இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் உள்ள 15,446 இடங்களில் 5939 இடங்களே இதுவரை பூர்த்தியாகியுள்ளன. இதேபோல கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் உள்ள 22,088 இடங்களில் 11,221 இடங்களே பூர்த்தியாகியுள்ளன. அதாவது 50 சதவீத இடங்களே பூர்த்தியாகியுள்ளன. கணிசமான மாணவர்களின் முதல் விருப்பமாக இருந்த எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிக்கேன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் உள்ள 23,375 இடங்களில் 18,058 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிஸ் பாடப்பிரிவில் உள்ள 15,627 இடங்களில் 10,222 இடங்களும் மெக்கானிக்கல் இன்ஜியரிங் பாடப்பிரிவில் உள்ள 15,304 இடங்களில் 13,201 இடங்களும் பூர்த்தியாகியுள்ளன.