உள்ளூர் செய்திகள்

8, 9, 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை

பெங்களூரு: அரையாண்டு பொது தேர்வு நடத்திய கர்நாடக அரசின் தலையில், சுப்ரீம் கோர்ட் ஓங்கி குட்டியுள்ளது. மேலும், 8, 9, 10ம் வகுப்பு, ரிசல்ட் வெளியிடவும் தடை விதித்துள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க, கர்நாடக கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. பல மாற்றங்களை கொண்டு வருகிறது. ஆனால் சீர்திருத்தம் என்ற பெயரில், சில குளறுபடிகளையும் செய்து, மக்களின் அதிருப்திக்கு ஆளாகிறது.மாணவர்களின் கல்வி திறனை அளவிடும் வகையில், 8,9, 10ம் வகுப்புகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடத்த, அரசு முடிவு செய்தது. இது குறித்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா சுற்றறிக்கை வெளியிட்டார். நடப்பு கல்வியாண்டில் 5, 6, 8, 9ம் வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தவும், அரசு திட்டமிட்டிருந்தது.இதற்கு அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. கல்வி வல்லுனர்கள் சிலரும், ஆட்சேபம் தெரிவித்தனர். இது பற்றி கேள்வி எழுப்பி, மாநில உயர் நீதிமன்றத்தில், தனியார் பள்ளிகள் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை நடப்பாண்டு மார்ச் 22ல், தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொதுத்தேர்வு நடத்த அரசுக்கு அனுமதி அளித்தது.தனியார் பள்ளிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ஏழு வட மாவட்டங்கள் உட்பட, 24 மாவட்டங்களில் 8, 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, செப்டம்பர் இறுதியில் அரையாண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். தேர்வு நடத்துவது குறித்து, மக்களின் கருத்தை கேட்கவில்லை.பொதுத்தேர்வு நடத்தியது சர்ச்சைக்கு காரணமானதால், அரையாண்டு தேர்வு முடிவு வெளியிடுவதை, அரசு நிறுத்தியது. மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு, தேர்வு நடத்துவதை தள்ளி வைத்தது. தன் சுற்றறிக்கையை திரும்ப பெற்று கொண்டது.இதற்கிடையில், தங்களின் ஆட்சேபத்தை அலட்சியப்படுத்தி, அரையாண்டு பொதுத்தேர்வு நடத்தியது குறித்து கேள்வி எழுப்பி, தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.இம்மனு நீதிபதி பேலா எம் திரிவேதி, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன்பாக, விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, அரையாண்டு பொதுத்தேர்வு நடத்திய, கர்நாடக அரசை வன்மையாக கண்டித்தார்.மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்களுக்கு ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள். எந்த மாநிலங்களிலும், இதுபோன்று நடந்தது இல்லை. இதுபோன்று செயல்பட கூடாது. அகங்காரத்தால் பிரச்னையை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.உங்களுக்கு உண்மையில், மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால், சிறப்பான பள்ளிகளை திறக்கலாம். மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் வேலையை செய்யாதீர்கள். கர்நாடக அரசு பின்பற்றும் கல்வி நடைமுறை போன்று, வேறு எந்த மாநிலங்களும் பின்பற்றவில்லை.அரையாண்டு பொதுத்தேர்வு நடத்தாத மாவட்டங்களின் பள்ளிகளில், தேர்வு நடத்த கூடாது. ஏற்கனவே தேர்வு நடந்திருந்தால், அடுத்த உத்தரவு வரும் வரை, முடிவுகளை அறிவிக்க கூடாது. நான்கு வாரங்களில், தேர்வு குறித்து விபரங்கள் அடங்கிய அபிடவிட்டை, மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்