உள்ளூர் செய்திகள்

கல்வெட்டு, நூல் ஆதாரம் மூலம் பெண்களின் பங்களிப்பு விளங்கும்

தஞ்சை தமிழ்ப்பல்கலையில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை சார்பில் "இடைக்கால தமிழக வரலாற்றில் மகளிர்-கல்வெட்டுகள் ஒரு சிறப்பு பார்வை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மத்திய அரசு தொல்லியல்துறை தேசிய நினைவுச் சின்னம் மற்றும் தொல்பொருள் இயக்கம் (டில்லி) இயக்குனர் சத்தியபாமா பத்ரிநாத் பேசியதாவது: சங்க காலத்தில், பெண்பாற் புலவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவ்வைக்கு அதியமான் மன்னன் மதிப்பு, மரியாதை அளித்தார். சங்க காலம் முதல் பக்தி, அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெண்கள் பெரும் பணி ஆற்றினர். இதை இலக்கியம், கல் வெட்டுகளில் காண முடிகிறது. பல்லவ குல அரசியர், பெயரில் பல கிராமம் உருவாயின. தற்போதைய, விழுப்புரத்தில் அக்கல நிம்மாடி கிராமம் அவ்வாறு உருவானது. இதை பல்லவ மன்னர் தந்திவர்மன், தன் மனைவி அக்கல நிம்மாடி பெயரில் ஏற்படுத்தி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். சிதம்பரம் கல்வெட்டில், "பெர்ஷிய நாட்டை சேர்ந்த, இரு பெண்கள், தில்லை கோவில் வளாகத்தில் சன்னிதி அமைக்க கொடை வழங்கினர்" என அறியலாம். சோழமன்னன் கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவி, சோழ அரசியரில் குறிப்பிடக்கத்தக்கவர். இவர் பல செங்கற்கோவிலை கற்கோவிலாக (கற்றளி) மாற்றினார். புதிய கோவில்களை நிர்மாணித்தார். கோவில் கட்டடக்கலையில் பரிணாம வளர்ச்சியும் மிகச்சிறந்த சோழ செப்பு திருமேனி மாதிரியும் உருவாகக் காரணமானவர். பெரியகோவில் கல்வெட்டு, முதலாம் ராஜராஜனின் அரசியர், சகோதரி குந்தவை கோவிலுக்கு அளித்த கொடையை விளக்கும். கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோவில், ஆடுதுறை திருகுரங்காடுதுறை கோவில், திருக்கோடிகாவல் திருக்கோட்டீஸ்வரம் கோவில், குத்தாலம் சோழீஸ்வரர் கோவில், செம்பியன்மாதேவி கைலாயநாதர் கோவில் அமைய குந்தவையே காரணம். தென்னிந்தியாவில், ஆந்திராவிலுள்ள அமராவதியில் கிடைத்த, 145க்கும் மேற்பட்ட கல்வெட்டில், 72 கல்வெட்டு மூலமாக பவுத்த சைத்தியம், விஹாரங்களுக்கு பெண்கள் கொடையளித்ததும், நாசிக் குகைகளில் காணப்படும் பல கல்வெட்டு மூலமாக, சாதவாகன அரசர் குல மகளிர் அதிக எண்ணிக்கையில் கொடை வழங்கியதும் தெரிய வருகிறது. விஜயநகர பேரரசில், இரண்டாம் குமார கம்பன்னா மனைவி கங்காதேவியின் மதுரா விஜயம் நூல் மூலம் அக்கால மதுரை அரசியல், சமூக, பொருளாதாரம் விளங்குகிறது. மேலும், வரலாற்று ஆதாரமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்