உள்ளூர் செய்திகள்

கொங்குச் சீமையில் பொங்கித் ததும்பி பூரணமாய் பொலிந்த பிரமாண்ட தவம்

“ பஞ்ச பூதங்கள் சமநிலை பெறாததால் பூகம்பமாக, சூராவளியாக, சுனாமியாக, காடுகளில் தீயாகப் பல்வேறு மாற்றங்கள் தோன்றக் காண்கிறோம். பஞ்ச பூதங்கள் அற்புதமாக அமைந்திருக்கின்றன. நன்மை செய்யவே அவை காத்திருக்கின்றன. மனிதனின் சமநிலை மாற்றத்தாலேயே பல தீமைகள் நிகழ்கின்றன “ என கோவையில் நடைபெற்ற உலக அமைதி தின தவ விழாவில் “ ஏன் அமைதி வேண்டும்" என்ற தலைப்பில் உரையாற்றுகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் குருமகான் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசுகையில் “ மனிதனுக்கு அக அமைதியும் புற அமைதியும் வேண்டும். அகத்தில் அமைதியும் புறத்தில் செயல்பாடுகளும் தேவை. உலகம் முழுவதும் இன்று கலவரங்கள். குடும்பக் கலவரங்கள் சமுதாயத்தில் இனக் கலவரமாக, மதக் கலவரமாக, தேசியக் கலவரமாக நடந்து கொண்டே உள்ளது. அமைதி வேண்டி ஆலயங்கள், சர்ச்சுகள், மசூதிகள் நோக்கிச் செல்லுகின்றனர்.கடவுளிடம் சென்றால், கடந்து உள் நோக்கிச் சென்றால் மன அமைதி பெற்றுப் பல்வேறு போராட்ங்கள் நீங்கி பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடுகளைப் பெறலாம். மனிதன் சமநிலையிலிருந்து தவறியதால்தான் பல்வேறு தீமைகள் நிகழ்கின்றன. தீவிரவாதம் தலைதூக்குகிறது. உலகம் முழுவதும் அமைதி இழந்து காணப்படுவதை மாற்ற ஒரே வழி அக சிந்தனைதான். புறத்தில் சென்று எங்கு தேடினாலும் மனம் சமநிலை பெறாது. ஆழ்மன அமைதியால்தான் அற்புதமானநல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.அந்த அமைதி அலைகளை நகரம், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் முழுவதும் உள்ள அறிவாளிகளும், ஆன்மிக வாதிகளும், அறிவார்ந்த சிந்தனையாளர்களும் ஒன்றுபட வேண்டும் ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட அன்நே உலக சமாதானம் “ என தமது உரையின் முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டார்.பார் முழுவதும் போர் மூழுமோ என்ற அச்சம், அறிவியலின் சாதனை என்ற பெயரால் பால் வெளி மண்டலத்தையும் பாழ்படுத்துகின்ற முயற்சிகள், ஆற்றலை வெளிப்படுத்துகிறோம் என அணு ஆயுதங்களைப் பெருக்கி “ சொரி பிடித்தவன் கை “ போல வெறி பிடித்துத் திரியும் வல்லரசுகளின் போக்கு. இவையனைத்தையும் உடனடியாகக் கட்டுப்படுத்தாவிடில் பஞ்ச பூத, இயற்கைச் சீற்றங்களின் கோரத்தாண்டவத்திலிருந்து பிரபஞ்சம் தப்பாது . அதற்கான ஒரே வழி கடந்து உள் சென்று அமைதிவழி காண்பதே என்ற நோக்கில் கொங்குச் சீமையின் தலைநகராம் கோவையில் பூ.சா.கோ. கன்வென்ஷன் மண்டபத்தில் நவம்பர் 11ஆம் தேதி 11 மணி 11 நிமிடத்தில் ஒரே சிந்தனையோடு, ஆழ்ந்த, உருக்கத்தோடு ஒருங்கிணைந்த, விரிந்து கிடக்கின்ற சூரிய ஒளியை ஒரு முனையில் குவிப்பது போன்று பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள், இன, மத, மொழி, சமய வேறுபாடற்ற ஞானியர்கள் ஒன்றுகூடி மேற்கொண்ட தவம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்ப் பொலிந்தது.2011 ஆம் ஆண்டு முதன் முதலாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 11.11 மணிக்கு உலகநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற உலக அமைதி தின விழாவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடகளிலுள்ள உலக சமாதான ஆலயக் கிளை நிறுவனங்கள் அவ்வந்நாட்டு நேரப்படி 11 மணி 11 நிமிடத்திற்கு அமைதிப் பேரணி நடத்தி வருகின்றன. நாள் முழுவதும் இந்நல்லெண்ண அமைதித் தவம் உலகிடை சாந்தியையும் சமாதனத்தையும் சந்தோஷத்தையும் அளித்து சத்திய யுகத்தைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.கோவையில் நடைபெற்ற பிரமாண்ட தவத்தில் 1500 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுத் தவம் மேற்கொண்டனர்குருமகான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரஜாபதி அடிகளார், சமூக முற்போக்குச் சிந்தனையாளர் கார்த்திகேயன், சிரியாவிலுள்ள ஐ.நா.தலைமையகத் தலைமை நிர்வாகி ராஜா ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜா ஆறுமுகம் உரையாற்றுகையில், "இந்த அமைதித் தத்துவத்தை நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் பிரகடனமாகச் செய்ய ஆவன மேற்கொள்ளுவதாக" உறுதியளித்தார்உலக சமாதன ஆலயத்தை நிறுவிய ஜெகத் மகா குரு ஞான வள்ளல்தம் “ ஞான உதய தினமாக”வும் இந்நாள் அமைந்ததால் இரட்டிப்பு ஆற்றலும் அமைதியும் அளித்தன எனலாம். முன்னதாக அறக்கட்டளைப் பொதுச் செயலர் ஞானாசிரியர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்புரையும் நோக்கவுரையும் ஆற்றினார்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்