உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  ஐ.ஏஸ்., அதிகாரி பிரியாராணி படிப்பில் படுசுட்டி

 ஐ.ஏஸ்., அதிகாரி பிரியாராணி படிப்பில் படுசுட்டி

- நமது நிருபர் - பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த பெண், பெங்களூரில் பார்த்து வந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் பணியை உதறி தள்ளி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உயர்ந்து, மக்களுக்கு சேவை செய்கிறார். பீஹார் மாநிலத்தின், குர்குரி என்ற சிறிய கிராமத்தில், 1994 ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தவர் பிரியாராணி. அன்றைய காலத்தில் பெண்கள் கல்வி கற்பது, குதிரைக்கொம்பாக இருந்தது. திருமணமாகி கணவர், குழந்தைகளை பார்த்து கொண்டு, குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணுக்கு, கல்வி அவசியம் இல்லை என்ற பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இருந்த காலம் அது. பிரியாராணி பிறந்த கிராமமும், அதற்கு விதி விலக்கு அல்ல. இவருக்கு கல்வியில் அதிக ஆர்வம் இருந்தது. இதையறிந்த இவரது தாத்தா சுரேந்திர பிரசாத் சர்மா, தன் பேத்தியின் எதிர்காலத்துக்காக, குடும்பத்தை பீஹாரில் இருந்து, பாட்னாவுக்கு இடம் மாற்றினார். பேத்தியை பள்ளியில் சேர்த்தார். தாத்தாவின் நம்பிக்கையை பிரியாராணி பொய்யாக்கவில்லை. படிப்பில் சிறந்து விளங்கினார். அதிக மதிப்பெண் பெற்று, முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். பிரபலமான, பி.ஐ.டி. மெஸ்ரா கல்வி நிறுவனத்தில், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். படிப்பு முடிந்தவுடன், அவருக்கு பெங்களூரின் முக்கியமான கார்ப்பரேட் நிறுவனத்தில், வேலை கிடைத்தது. மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெற்று வந்தார். ஆனால், அவருக்கு பொதுச்சேவையில் நாட்டம் இருந்தது. பெருமளவிலான ஊதியம் அவருக்கு பெரிதாக தோன்றவில்லை. எனவே, கை நிறைய ஊதியம் கிடைத்த கார்ப்பரேட் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்தார். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராக துவங்கினார். தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இரண்டாவது முயற்சியிலேயே, பிரியாராணி, நாட்டின், 284 ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன் பின், மத்திய தோட்டங்கள் பாதுகாப்பு துறையில், பணியில் அமர்ந்தார். பணி நெருக்கடிக்கு இடையிலும், படிப்பை தொடர்ந்தார். யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, 69வது ரேங்கில் தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி, தன் கனவை நனவாக்கி கொண்டார். வெற்றிக்காக நாம் எத்தனை முறை முயற்சித்தோம் என்பது முக்கியமல்ல. அதற்காக எவ்வளவு கடினமாக உழைத்தோம் என்பதே, வெற்றியை தீர்மானிக்கும். கடின உழைப்பு, மன உறுதியும் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு, பிரியாராணி சிறந்த எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, மக்களுக்கு தொண்டு செய்வதுடன், பெண்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !