நன்றி சொல்ல வார்த்தை இல்லை... பழங்குடியினர் நெகிழ்ச்சி | Distribution POlio drops
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது கிளன்ராக் வனப்பகுதி. பந்தலூர் பஜாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியில் வர முடியாமல் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருந்தனர். இதையறிந்த வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மேற்பார்வையில் சொட்டு மருந்து கொடுக்க குழு அமைக்கப்பட்டது. இதன்படி கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராதிகா, சுகாதார ஆய்வாளர் கௌரிசங்கர், செவிலியர் வனிதா உள்ளிட்டோர் வனத்துறையினர் பாதுகாப்புடன் காட்டு வழியாக கிராமத்திற்கு 10 கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்றனர். அங்கு பழங்குடி மக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது. வனவிலங்கு நடமாட்டம் உள்ள 10 கிலோமீட்டர் தூரம் சுகாதாரத்துறையினர் நடந்தே சென்று பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.