உள்ளூர் செய்திகள்

நிலமும் நானும்

நாகர்கோவில், முள்ளங்கனாவிளை சாலையை ஒட்டியபடி இந்த வாழைத் தோட்டம். உள்ளே நுழைந்ததும், வலது புறத்தில் இருந்து வரவேற்கிறது மேல் நோக்கி பூத்திருக்கும் மூங்கில் வாழை. 'அதோ... உயரமா இரு க்கு பாருங்க... அதுதான் ஒற்றைகொம்பன் வாழை; அந்த ரகத்துல ஒரே ஒரு சீப்பு மட்டும்தான் விளையும்; 10 பழங்களோட அதுவே 13 கிலோ தேறும்' - தோட்டத்து கல் இருக்கையில் அமர்ந்து தன் வாழையடி வாழ்வை பேசத் துவங்கினார் 68 வ யது ஜோ பிரகாஷ். ஓய்வுகால தோழனாய் நிலம் என்னோட ஓய்வுகாலத்தை அர்த்தமுள்ளதா ஆக்குறது இந்த 80 சென்ட் நிலம்தான்; என் வழியிலும், என் மனைவி வழியிலும் கிடைச்ச சொத்து. 2015, ஏப்ரல் மாதம் பணியில இருந்து எனக்கு ஓய்வு கிடைச்சது. செப்டம்பர் மாதம் என் பேத்தி பிறந்தாள். ரசாயனம் கலக்காத வாழைப் பழங்களை அவளுக்கு பரிசா கொடுக்கணும்னு எனக்கு ஆசை! சின்னவயசுல காய்கறி தோட்டம் போட்ட அனுபவத்துல சிங்கன், மட்டி ரக கன்றுகளை நட்டு வச்சேன். பேத்திக்கு ஒரு வயசு ஆனப்போ மட்டி தார் விட்டிருச்சு. என் பேத்தி முதன்முதலா ருசிச்ச வாழைப்பழம் இந்த தாத்தாவோட உழைப்புல இந்த நிலத்துல விளைஞ்சது! எண்ணங்களுக்கு வடிகாலான நிலம் 'நம்ம கன்னியாகுமரி மாவட்டத்துல ஏகப்பட்ட வாழை, பலா ரகங்கள் இருக்கு; அதெல்லாத்தையும் தேடி கண்டுபிடிக்கணும்' - என்னைக்கோ என் நண்பர் இப்படி சொன்னது என் மனசுல இருந்தது. பணி ஓய்வுக்கு அப்புறம் மனைவி துணையோட அதெல்லாத்தையும் தேட ஆரம்பிச்சேன். இப்படி சேகரிச்சதுல இன்னைக்கு என் நிலத்துல 49 வாழை ரகங்கள் இருக்கு; இதுல, சிங்கப்பூர், மலேசியா, ஆப்ரிக்கா வாழை ரகங்களும் அடக்கம். கன்னியாகுமரி தோட்டக்கலை துறைக்கு 30 வாழை ரகங்கள் கொடுத்திருக்கேன். இதெல்லாத்துக்கும் காரணம் இந்த நிலம்தான்! ஊரடங்கில் கைகொடுத்த தோழன் 'கொரோனா' ஊரடங்கு நேரத்துல இந்த நிலம்தான் என் குடும்பத்துக்கு நண்பன். அப்போ, கொஞ்சம் ஆடு மாடுகள் இருந்தது. வீட்டு வேலைகளை முடிச்சுட்டு மனைவி பேத்தின்னு எல்லாரும் தோட்டத்துக்கு வந்திரு வோம். தண்ணீர் பாய்ச்சிட்டு, அப்படியே ஆடு மாடு மேய்ச்சிட்டு சந்தோஷமா இருந்தோம். இந்த தோப்பை உருவாக்கினது நானா இருக்கலாம்; ஆனா, தோப்பை காப்பாத்திட்டு வர்றது இந்த நிலம்தான்! அதனாலதான், இன்னைக்கும் என்னைத் தேடி வந்து வாழைக்கன்று, பழங்கள் கேட்குறவங்ககிட்டே நான் பணம் வாங்குறதில்லை! ஆத்ம நண்பன் விஷம் இல்லா நில ம் விளைச்சல்ல குறை வைக்கலை. மனைவி தவறி ஐந்து ஆண்டுகள் ஆயிருச்சு. மகள், குடும்பத்தோட சென்னையில இருக்குறாங்க. பேத்தி ஞாபகம் வர்றப்போ அவளுக்காக வைச்ச மரத்தை கட்டிப் பிடிச்சுக்குவேன். சென்னை போற நாட்களைத் தவிர என் அன்றாடம் இந்த நிலத்தோடதான்! இந்த நிலம் எனக்கு எல்லாமுமான நண்பன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !