நாங்க என்ன சொல்றோம்னா...: இத்திரி நேரம் (மலையாளம்)
இமைகள் மூடி வெளிச்சம் பார்ப்பவனே...வா... என் விரல் பிடி; என் மனம் நிறைத்திருப்பதில் உன்னிடம் கொஞ்சம் பகிர வேண்டும்; நீ நேசித்த பெண் ஒருத்தியிடம் இருந்து எட்டு ஆண்டுகள் கழித்து உனக்கு ஓர் அழைப்பு வருகிறது; நீ என்ன செய்வாய்? அஞ்சனாவிடமிருந்து அழைப்பு வந்ததும், தான் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவில் 30 வயது அனிஷ் மீண்டும் பிறந்ததை நான் பார்த்தேன்; பால் பாத்திரத்தில் மூழ்கி எழுந்த நிலா போல் மாறியது அவன் முகம்! 'சந்தித்தார்களா' என்கிறாயா; ஆமாம்... சிந்திக்க முடியாத இடத்தில் சந்தித்தார்கள். ஏய்ய்ய்... புருவம் சுருக்காதே; மதுபானக்கூடத்தில் சந்தித்தனர். மிகுந்த பிரியத்திற்கு உரியவர்களிடம் கோபம் கொள்கையில், கோபத்திற்கு காரணம் காட்ட ஒன்று வேண்டுமல்லவா; இவர்கள் பழிபோட... மது! இன்னொருத்திக்கு கணவனான பின்னும் அஞ்சனாவின் மீதான அனிஷின் வற்றா காதலும், அந்த காதலுக்குள் பொதிந்து கிடக்கும் பஞ்சு போன்ற காமத்திற்கு நெருப்பு மூட்டும் மதுவும், 'அடுத்தது 'அந்த' காட்சிதான்' எனும் கிளர்ச்சியை எனக்குள் கிளப்பியது! சட்டென ஓய்ந்து குடை மடக்க வைக்கும் மழை போல ஒரு சம்பவம்; அது நான் நினைத்த 'அது' இல்லை. முழு இரவையும் அஞ்சனாவோடு கண்ணியமாய் கழிக்க வேண்டிய கட்டாயம் அனிஷுக்கு; தாடியைத் தாண்டி வழியும் தாய்மை உணர்வுடன் அவளுக்குத் தாயாகிறான் அவன்! 'இமைகள் மூடி வெளிச்சம் பார்க்கத் தேவை மந்திரசக்தி அல்ல... மனசு' என்று உணர்ந்த நம் போன்றோருக்கு மட்டுமே இக்காட்சிகளில் தெறிப்பது அன்பு; மற்றவர்களுக்கு... அருவருப்பு! பொழுது விடிகிறது; அவரவர் பாதையில் பிரிந்து செல் ல வேண்டிய தருணம். அனிஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறாள் அஞ்சனா. அதற்காக அன்றி எதற்காகவோ அழுகிறான் அவன். இமைகள் மூடினேன்; வெளிச்சமாய்... அனிஷ் அழுத காரணம் தெரிந்தது; அது... காதல். ஆக....96 படம் காதலை வணங்க வைத்தது; இது, காதலை உணர வைக்கிறது!