முதல்வர் பேசுகிறேன்!
வணக்கம்... நான் த.லலிதா. ஈரோடு, மொடக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இயற்பியல் மீதான என் தீவிர ஆர்வத்தால 25 வயசுலேயே இயற்பியல் ஆசிரியை ஆயிட்டேன். என்னோட 44 வயசுல 2021ம் ஆண்டிற்கான 'தேசிய நல்லாசிரியர் விருது' வாங்கினதுல ரொம்பவே சந்தோஷம்!நல்லாசிரியைஅன்றாட வாழ்க்கையில இயற்பியலோட பயன்பாடு, மாற்றத்திற்கான கருவியா இயற்பியலை கையாளுற நுட்பம்... இதையெல்லாம் பேச்சு வழக்குல விளக்கமா மாணவர்களுக்கு சொல்லித் தர்றேன். பள்ளியில 'அடல் டிங்கரிங்' ஆய்வகம் அமைக்க சி.எஸ்.ஆர்., நிதி திரட்டினேன். இதெல்லாம் என் அடையாளங்கள்!அளவுகோல்என் திறமைக்கான அளவுகோல் மாணவர்கள்தான்! பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்குற என்னை, தங்களுக்கு பாடம் நடத்தச் சொல்லி 8ம் வகுப்பு மாணவர்களும் வற்புறுத்தி கேட்பாங்க. ஆசிரியர்களோட திறனை மாணவர்கள் தேனீக்களா படையெடுத்து வந்து மொய்க்கணும்!நேர்வழிஆசிரியர்களோட தவறுகளை என் பின்னால நின்னு மறைச்சுக்க ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டேன். அந்த தவறோட விளைவுகள் மாணவர்கள்கிட்டே எதிரொலிக்கும்னு நான் நம்புறதால ஆசிரியர்களோட தவறுகளை கண்டிக்காம நான் இருந்ததில்லை!கண்ணோட்டம்என் பள்ளி மாணவியர் உயர்கல்வி, வேலைன்னு அடுத்தடுத்த நிலைகளுக்கு போகணும்னு ஆசைப்படுறேன். இன்னமும் கிராமப்புற பெற்றோர், தங்களோட பெண் குழந்தைகளுக்கு 17 வயசுலேயே திருமண வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறாங்க. இந்த நிலைமை மாறணும்னா, கல்வியை வாழ்க்கையா பார்க்குற கண்ணோட்டம் அவங்களுக்கு வரணும்!என் எதிரிமனிதர்களுக்கு சக மனிதர்கள் மேல நம்பிக்கை இல்லை; அற மதிப்பீடுகள் குடும்பத்துக்குள்ளே கேலி செய்யப்படுது; இளம் தலைமுறையின் நல்ல எண்ணங்கள் சிதைந்து போறதுக்கான நிகழ்வுகள், பொது வெளியில நாளுக்கு நாள் பெருகிட்டு வருது; ஒரு ஆசிரியையா இந்த எதிர்மறை விஷயங்களைத்தான் என் எதிரிகளா உணர்றேன். என் அறிவியல் துணையோடவும், கலைகளின் உதவியோடவும் இதை எதிர்த்துப் போராடுறேன்; போராடுவேன்!என் எதிர்காலம்என் எதிர்காலத்தைப் பற்றி எந்த திட்டமிடலும் இல்லை. கல்வித் துறையில ஏதாவது ஆய்வுகள் செய்யணும்னு ஆசை இருக்கு. சமீபத்துல, 'பிளஸ் 1 மாணவர்களிடம் தலைமைப் பண்பு' தலைப்புல ஒரு ஆய்வு பண்ணியிருக்கேன். கிராமப்புற மாணவர்கள் வாழ்க்கையை உயர்த்த என்னால இயன்றதை ஏதாவது ஒருவகையில செஞ்சுக்கிட்டேதான் இருப்பேன்.