24/7 மகிழ்ச்சி
'மனம் உருகும் பிரார்த்தனையால் மட்டுமல்ல... மழலையோடு கொஞ்சி விளையாடினாலும் மனக்கஷ்டம் வில கும்!' - இது, மதுரை அண்ணாநகர் 'லிட்டில் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ்' மழலையர் பள்ளி முதல்வர் மகாலட்சுமி பிரதீப்ராஜின் நம்பிக்கை. மகாலட்சுமி பார்வையில் மழலையர் உலகம்?பறவையோட முதுகுல உட்கார்ந்து வானத்துல வட்டமடிக்கலாம். கடல்ல ஆழமா நீந்திப் போய் இன்னொரு உலகத்தைப் பார்க்கலாம். காக்கா கூடு பக்கத்துல வீடு கட்டிக்கலாம். இப்படி, குழந்தைங்க உலகத்துல எல்லாமே சாத்தியம்! அந்த உலகத்துக்குள்ளே நாம நுழைஞ்சிட்டா...அழுகைகள் நமக்கு பிடிக்கும்; பொய்கள் இனிக்கும்; மன்னிக்கிற மனசு உருவாயிடும். அந்த உலகத்துல அனுபவ அறிவு பயன்படாது. 'மத்தவங்க என்ன நினைப்பாங்க'ங்கிற சிந்தனையே இருக்காது! செம... செம! மழலையின் எந்த செயலை இன்றும் தவறாக அணுகுகிறோம்?இந்த வயசுல உலகமே தன்னோடதுன்னு அவங்க நம்புறதால, அடுத்தவங்க பொருட்களும் தன்னோடதுன்னு அவங்க நினைக்கிறது இயல்பு; அதை 'திருட்டு'ன்னு நாம சொல்றது பெரிய தப்பு! இனிக்கும் கேள்விகள்சமத்தா இருக்குற குழந்தைகள் கிளம்புறப்போ கையில 'ஸ்டார்' வரையுறது என் பழக்கம். சில வாண்டுகள் காலையில வந்ததுமே கை நீட்டும்; அப்போ, 'என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?'ன்னு கேட்பேன்! 'அந்த ரைம்ஸ் பாடி காட்டுங்களேன்'னு நான் கெஞ்சும்போது வாய் திறக்காம அடம் பிடிச்சிட்டு, நினைச்ச நேரத்துல அதை புலம்பிட்டு திரியுறப்போ, 'ஏம்மா இப்படி பண்றீங்க?'ன்னு கேட்பேன்! 'என் சாப்பாட்டுல கடுகு நிறைய இருக்கு; அதை தனியா பிரிச்சு தாங்க'ன்னு ஒரு பொடுசு வந்து நின்னதும், எல்லாம் அதை திரும்பிப் பார்க்கும்; 'அய்யோ... இதுக என்ன வேலை தரப்போகுதுங்களோ?'ன்னு பதறுவேன்!எல்லாம் சரி... இப்படி ரசிச்சுட்டு இருந்தா நம்ம உலகத்துக்கு அவங்களை எப்படி தயார் பண்றது?எதுக்கு இந்த அவசரம்; குழந்தைகள் நீட்டுற ஓவியத்துல யானைக்கு கொம்பு முளைச்சிருந்தா ரசிப்போம்; காருக்கு மேல ஹெலிகாப்டர் இறக்கைகள் இருந்தா கைதட்டுவோம்; இதெல்லாம்... அவங்க மனசுக்கான உரம். எதையும் ரசிக்கவும், கைதட்டி உற்சாகப்படுத்தவும் நம்ம மூலமா அவங்க கத்துக்கிட்டா இந்த உலகம் அவங்க காலடியில்! வாவ்; ஆமா... 'குழந்தை மனசு'ன்னா என்னங்க?தன்னை அடிச்சவங்கன்னு யோசிக்காம, கை நீட்டி அழைச்சதும் அவங்ககிட்டேயே அடைக்கலம் ஆகுற அந்த தங்க மனசு.பெற்றோருக்கு ஒரு குட்டு! எழுதின எழுத்து கூட அடிச்சு திருத்துனா அலங்கோலம் ஆயிடுது; அப்புறம் ஏன், 'குழந்தைகளை அடிச்சு திருத்தணும்'னு நினைக்கிறீங்க?