காற்றினிலே வரும் கீதம்
மனமெங்கும் இறைந்து கிடக்கும் உணர்வு இறகுகளை ஒன்று திரட்டி சிறகாக்கி தரும் வல்லமை சில குரல்களுக்கு உண்டு; எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் குரல் அப்படியானது! 'பாரத ரத்னா' உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு கவுரவம் சேர்த்த காந்த குரல்; பிறப்பால் அல்ல புகழ்... இறைவன் இட்ட திறமையால்... அத்திறமையை சிகரமேற்றும் வல்லமையால்' என்று நிரூபித்த மீராவின் குரல்! 'இவ்வுலகில் சூரியன் உதிக்கும் மட்டும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் குறையாது!' காஞ்சிப் பெரியவர் சொன்ன இவ்வுண்மையை மேடையில் பறைசாற்ற புறப்பட்டிருக்கிறது எம்.வி.பாஸ்கர் - லாவண்யாவின் த்ரீ நாடக குழு. எம்.எஸ்.சுப்புலட்சுமியாக மேடையில் வாழவிருக்கிறார் லாவண்யா வேணுகோபால். எம்.எஸ்.சுப்புலட்சுமி எனும் பெண்மையின் பெருமையாக நீங்கள் உணர்ந்தது என்ன?'தேவதாசி குலத்துல பிறந்திருந்தாலும் நான் சங்கீத உலகை ஆள்வேன்'னு அவங்களுக்கு இருந்த மன உறுதி; யோசிச்சுப் பாருங்க... ஒரு பெண் பாடினா பக்கவாத்தியத்துக்கு ஆண்கள் வராத காலகட்டத்துல தன் கனவை அடைய எவ்வளவு போராட்டங்களை அவங்க சந்திச்சிருக்கணும்; 16 வயசுல 'மியூசிக் அகாடமி' மேடை ஏறுற வாய்ப்பை அவங்களுக்கு உருவாக்கித் தந்தது அவங்க மன உறுதிதான்! விஎஸ்வி ரமணன் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 'காற்றினிலே வரும் கீதம்' வாழ்க்கை சரிதத்தை தழுவி அதேபெயரில் நாடகமாக்கி இயக்கி இருக்கிறார் நாடக உலகின் ஜாம்பவானான பாம்பே ஞானம். 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத் தில் நீங்கள் தொலைந்த பக்கங்கள்?பத்து வயது சிறுமியா எச்.எம்.வி., நிறுவனத்துக்கு பாடின நிகழ்வு; கணவர் சதாசிவத்தின் கரம் கோர்த்து அவங்க முன்னேறிய விதம்; சதாசிவத்தின் இரண்டு குழந்தைகளை தன் குழந்தைகளா பாவித்த அந்த தெய்வீக தாய்மை; சாவித்திரி படத்துல 'நாரதர்' பாத்திரம் ஏற்றதுக்கான காரணம்; கச்சேரிகள் தந்த வருமானத்துல பெரும் பகுதியை அறப்பணிகளுக்காக செலவு பண்ணின அந்த மனசு... இப்படி நிறைய; நாடகம் இதற்கு இணையா சிலிர்ப்பூட்டும்! இரண்டு மணி நேரம் இருபது நிமிட 'காற்றினிலே வரும் கீதம்' நாடகத்தில், இடைவேளை தவிர காட்சிகளுக்கு இடைவெளியே கிடையாதாம்!இந்நாடகம் பார்த்தபின் ஆண், பெண் உணர்வுகள் என்னவாக இருக்கும்?அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் பாடுற வாய்ப்பு வந்தப்போ எம்.எஸ்.அம்மாவுக்கு வயது 60க்கும் அதிகம்; சங்கீதத்துல பெரும் அனுபவம் அப்போஇருந்தும், அந்த தெலுங்கு கீர்த்தனைகளை பாடுறதுக்காக ஓர் ஆண்டு தீவிர பயிற்சி எடுத்திருக்காங்க. அதனால, 'வாழ்க்கைக்கு பிறகும் ஜொலிக்கணும்னா வாழ்றப்போ கத்துக்கிட்டே இருக்கணும்'ங்கிற பாடம் நாடகம் பார்த்த எல்லாருக்கும் உணர்த்தப்பட்டிருக்கும்.'காற்றினிலே வரும் கீதம்'*செப்., 13, 14 - வாணி மஹால், சென்னை.*செப்., 15, 16 - நாரதகான சபா, சென்னை. 63747 46811