உள்ளூர் செய்திகள்

ஒரு ஊர்ல ஒரு பாட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத் துார் சந்தைபேட்டை தெருவில், தனது பூர்வீக வீட்டில், மாற்றுத்திறனாளியான வளர்ப்பு மகன் மணிகண்டனுடன் வசிக்கிறார் 74 வயது பால்பாக்கியம். மணிகண்டனை மதம் மாற்றச் சொன்னவர்களிடம் பிடிவாதமாய் மறுத்து, மதம் பிடிக்காமல் வாழ்வது இவரது தனித்துவம். பிச்சைக்கார பெண்ணை குளிப்பாட்டி விடுவதில் உயர்ந்து நிற்கிறது இவரது மனிதம். நல்லவங்களை பாட்டி அடையாளம் கண்டுபிடிக்கிறது எப்படி?ஏழை - பணக்காரன், படிச்சவன் - படிக்காதவன், ஆண் - பெண்; மனுஷங்களை இப்படி நான் தரம் பிரிக்கிறதில்லை. அன்பானவங்க - அன்பு இல்லாதவங்க... இவ்வளவுதான் என் பார்வை! அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுவது; நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏழைகளுக்கு வழிகாட்டுவது; இவை, 40 வயது வரையில் பால்பாக்கியத்தின் அன்றாட செயல்கள். இச்சேவைக்காகவே திருமணத்தை தவிர்த்திருக்கிறார். உங்க வாழ்க்கையில மணிகண்டன் வந்தது எப்படி?அப்போ எனக்கு 40 வயசு; பெரிய மாரியம்மன் கோவில் வாசல்ல இவனை பார்த்தேன். பிஞ்சு குழந்தையா சின்ன காயங்களோட கிடந்தான். 'தாய் - சுசிலா, தந்தை - கொண்டுசாமி, மகன் - மணிகண்டன்'னு சொன்ன ஒரு துண்டு சீட்டு இவன் பக்கத்துல கிடந்தது. இவனை வீட்டுக்கு துாக்கிட்டு வந்தேன். சொந்தக்காரங்க திட்டினாங்க. யார் என்ன சொன்னாலும் இவனை வளர்த்து ஆளாக்கணும்னு முடிவு பண்ணினேன்; சமூக சேவைகளை குறைச்சுக்கிட்டேன்!மளிகை பொருட்களை பொட்டலம் கட்டி ஈட்டிய பணத்தில் மணிகண்டனை வளர்த்திருக்கிறார் பால்பாக்கியம்.இருக்கட்டுமே... ஆனாலும், தாய் போல வருமா?மணிகண்டன் என்னை 'பாலா அக்கா'ன்னு தான் கூப்பிடுவான். அவன்கிட்ட சிலர் என்னை 'அம்மா'ன்னு கூப்பிட சொன்னப்போ நான் தடுத்துட்டேன். குழந்தையில அவனுக்கு கால் விரல்கள் முளைக்கலை. விரல்கள் பார்வைக்கு தென்பட்டப்போ, என் மார்ல பால் சுரக்குற மாதிரி உணர்ந்தேன்; இது போதும்... என் ஆயுசுக்கு!'என் மகன்'னு நீங்க பெருமைப் பட்ட தருணம்?கால்கள் செயல்படாத நிலையில அவனுக்கு கல்லுாரி பேருந்துல சலுகை கிடைக்கலை. ஆனா, கல்லுாரி கலை நிகழ்ச்சியில இவன் 'கீ-போர்டு' வாசிச்சதுக்காக சட்டையில ரூபாய் நோட்டுக்களை குத்தியிருக்கு அந்த நிர்வாகம். அதை இவன் திருப்பி கொடுத்தது தெரிஞ்சப்போ ரொம்பவே பெருமைப்பட்டேன்.சில வாரங்களுக்கு முன்பு மணிகண்டனின் வேலைக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கும் பால்பாக்கியம் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.பாட்டி சொல்லை தட்டாதே! * மனுஷனை மனுஷன் ஏச்சுப் பிழைக்காதீங்கய்யா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !