உள்ளூர் செய்திகள்

பெண் பார்வை!

'மிஸ்டர் யுனிவர்ஸ்' போட்டியின் 'மாஸ் டர்ஸ்' பிரிவில், 2023ம் ஆண்டு தங்கம் வென்றிருக்கும் 60 வயது சீனிவாசன், 'ஆணழகன்' போட்டிகளுக்காக இந்தியாவின் பல நகரங்களுக்கும் உலகின் சில நாடுகளுக்கும் பயணப்பட்டவர். நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க செல்வி?திருமணமாகி 34 ஆண்டுகள் ஆயிருச்சு; இன்னும் ஒருதடவை கூட சேர்ந்து கடற்கரைக்குப் போனதில்லை. தியேட்டருக்குப் போய் நாங்க பார்த்த ஒரே படம்... அபூர்வ சகோதரர்கள்! அவரும் நானும் சேர்ந்து வெளியே கிளம்புறதே பெரிய அதிசயம்தான்! சென்னை கொரட்டூரில் வசிக்கும் சீனிவாசன் - செல்வி தம்பதிக்கு இரு மகன்கள்; இரு பேரக்குழந்தைகள்! உறவுகளின் பார்வையில் உங்க சீனிவாசன் எப்படியானவர்?நான் அவரோட தாய்மாமன் மகள்தான். குடும்பத்துல எங்க திருமண பேச்சு உருவான நேரத்துல அவர் கட்டட கூலியா இருந்தார். குடிப்பழக்கம் இருந்தது. ஓர் அடி நிலம் கூட சொந்தமா கிடையாது. 'இப்படி ஒருத்தனுக்கு பெண்ணை கொடுக்கணுமா?'ன்னு சொந்தக்காரங்க எல்லாம் கேட்டாங்க! இப்போ அவர் கட்டட ஒப்பந்ததாரர். குடியை முழுமையா மறந்துட்டாரு. நாலு வீடு வாடகைக்கு விட்டிருக்கோம். அவர் குடிப்பழக்கம் துறந்தது எப்படி?முப்பது வருஷத்துக்கு முன்னால ஒருநாள், 'ஜிம்முக்குப் போகலாம்னு இருக்கேன்'னு வந்து நின்னார். ஆனா, இவரோட வருமானத்துக்கு 'ஜிம்' கட்டணம் கட்டுப்படியாகலை. தினமும் இவர் வாசல் வரை வந்துட்டு போறதைப் பார்த்த ஜிம் உரிமையாளர் இவரை ஜிம்முக்குள்ளே அனுமதிக்க, குடிப்பழக்கம் வெளியே ஓடிருச்சு! உங்க கணவரோட நட்பு வட்டம் எப்படியானது?'அறுபது வயசுல நாங்க நடக்க சிரமப்படுறப்போ நீ துறுதுறுன்னு இருக்குறது வரம்'னு அவங்க நண்பர்கள் சந்தோஷப்படுறாங்க. எதிர்ல இவர் வந்தாலே சிகரெட், மதுவை மறைச்சு வைக்கிறாங்க. நண்பர்கள் மத்தியில மரியாதை இருக்கு... தலைநிமிர்ந்து வாழ்றோம்! முக்கிய முடிவுகளின் போது உங்களிடம் ஆலோசனை கேட்கப்படுமா?பயிற்சி எடுத்த 'ஜிம்'மை இவர் விலைக்கு வாங்கினப்போ, 'இனி வருமானம் கூடும்'னு நினைச்சேன். ஆனா, இலவசமா பயிற்சி செய்ய நிறைய பேரை அனுமதிச்சார். கஷ்டம்னு வந்து நின்னா கல்லுாரி கட்டணம் கொடுத்து உதவுறார். பணத்தோட அருமையை அடிபட்டு உணர்ந்தவர்ங்கிறதால நான் எதுலேயும் தலையிடுறதில்லை. நல்லது கெட்டது அவருக்கு நல்லா தெரியும்! 'வயசாயிருச்சு... இதெல்லாம் எதுக்கு'ன்னு செல்வி உங்களை தடுக்கிறதில்லையா சீனிவாசன்?என்னை மனுஷனா மாத்தி வாழ வைச்ச 'பாடி பில்டிங்'கை உதற எனக்கு மனசு வராதுன்னு என் செல்விக்கு நல்லாவே தெரியும். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !