இப்படித்தான் வாழ்கிறேன்
வணக்கம். நான் வெ.ராஜலட்சுமி, நான் மூ.வேணி; திண்டுக்கல், நத்தம் வட்டம் மாமரத்துப்பட்டியில இருக்குறோம். 'எங்க கிராமத்துல இருந்து யாரும் கல்லுாரிக்குப் போனதில் லை'ங்கிற கறுப்பு அடையாளத்தை அழிக்க ஆசைப்படுறோம்! கல்வியின் மீதான உங்களின் தாகம் எத்தகையது? பள்ளிக்கு போக பேருந்து வசதி கேட்டு சாலை மறியல் பண்ணியிருக்கோம்! எங்களை ஆச்சரியமூட்டும் ஒரு உண்மை? இதுவரைக்கும் நாங்க பிரியாணி சாப்பிட்டதே இல்லை! 'இப்படியிருந்து எவ்ளோ நாளாச்சு' - இப்படி நினைக்க வைப்பது? மரத்தடி நிழல்ல தோழியோடு கதை பேசி ரொம்ப காலம் ஆயிருச்சு! மற்றவர்களின் எந்தவித வாய்ப்பு ஆசையைத் துாண்டுகிறது? விரும்புற பாடலை விரும்புற நேரத்துல 'ஸ்மார்ட்போன்'ல கேட்கிற வாய்ப்பு! 'நடிகர்கள் அஜித், விஜய் பிறந்தநாள் அன்னைக்கு எங்க கிராமத்துல சில அண்ணனுங்க கேக் தருவாங்க! அந்த காசுல எங்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வாங்கித் தந்தா நல்லாயிருக்கும்!' என ஆதங்கப்படும் ராஜலட்சுமிக்கும் வேணிக்கும் 'நர்சிங் பயில வேண்டும்' என்பது விருப்பம்! 22 வயது ராஜலட்சுமி, 18 வயது வேணி குடும்பங்களில் பிளஸ் 2 கடந்திருப்பது இவர்கள் இருவர் மட்டுமே! மாமரத்துப்பட்டியின் அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் கல்வி இடைநிற்றலும், இளம்வயது திருமணங்களும் நிறுத்தப்படும்; குழந்தை தொழிலாளர்கள் உருவாவதும் தவிர்க்கப்படும். துரதிருஷ்டமாக ராஜலட்சுமி உணர்வது என்ன?முன்மாதிரியா இருந்து வழிநடத்த ஊர்ல யாரும் இல்லை. 'உன்னை கல்லுாரிக்கு அனுப்பினா உன் தம்பி, தங்கச்சிகளும் படிக்கணும்னு அடம் பிடிப்பாங்க! எங்க வருமானத்துல உங்க கல்யாணத்துக்கு நகை சேர்க்குறதே பெரிய விஷயமா இருக்கு'ன்னு பெத்தவங்க புலம்புறாங்க. ம்ஹும்... இந்த கிராமத்துல பிறந்தது தான் துரதிருஷ்டம்! பெரும் மனபாரத்துடன் பேசும் ராஜலட்சுமிக்கு, தன் கிராமத்து குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் எடுப்பதே சிறு ஆசுவாசம்! வேணி மனசுல...எனக்கு நடனம் ஆடணும்னு ரொம்ப இஷ்டம். ஆனா, இதை யார்கிட்டேயும் என்னால சொல்ல முடியாது. நடனப் போட்டிகள் நடக்குறப்போ எல்லாம் உள்ளுக்குள்ளே உடைஞ்சு அழுவேன். இது ஒருபக்கம்னா, வங்கியில ஒருதடவை நான் ஆங்கிலத்துல கையெழுத்து போட்டப்போ, 'ஓ... இப்படி கையெழுத்து போடுறதுக்கு கூட உங்க ஊர்ல ஆள் இருக்கா'ன்னு ஒருத்தர் சிரிச்சார். இதுமாதிரி நிறைய காயங்கள் மனசுல இருக்கு! மாமரத்துப்பட்டியில் ராஜலட்சுமி, வேணி போல இன்னும் பல மாணவியர் இப்படித்தான் வாழ்கின்றனர்.