உள்ளூர் செய்திகள்

அவளே சரணம்!

மே 13, 2022. வழக்கம்போல இரவில் சவாரிக்கு புறப்படுகிறார் ஆட்டோ ஓட்டுனர் உஷா சேகர். கோயம்பேடு கூவம் பாலத்தை நெருங்குகையில் அந்த விபத்து!'இன்னும் நான் கொஞ்சம் முன்னேறியிருந்தா ரோட்டுல விழுந்து கிடந்தவங்க மேல என் ஆட்டோ ஏறியிருக்கும்! அதை தவிர்க்க, வண்டியை இடதுபக்கமா திருப்பினேன். ஆட்டோ கவிழ்ந்து என் இடுப்புல சரியான அடி!'அடுத்தநாள் காவல் நிலையத்துல, 'அந்த அக்கா ஆட்டோவை திருப்பலேன்னா எங்களுக்கு ஏதாவது ஆகியிருக்கும்'னு அந்த ரெண்டு பசங்களும் சொன்னாங்க. 'நீங்க கமிஷனர்கிட்டே பாராட்டு சான்றிதழ் வாங்கினவங்க தானே'ன்னு கேட்டுட்டு என் ஆட்டோவை போலீஸ் ஒப்படைச்சிட்டாங்க!'சில மாதங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி செய்வதறியாது பேருந்து நிலையத்தில் தவித்து நின்ற சிறுமியை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார் உஷா; இதற்காகவே கமிஷனரின் பாராட்டு!இரவு நேர சவாரி ஏன் உஷா?தொழில்நுட்ப வளர்ச்சி; 'ஆப்'கள் எல்லாம் சவாரியை பங்கு போட ஆரம்பிச்சிட்டதால வருமானம் குறைஞ்சு போச்சு! ராத்திரியில இந்த பிரச்னை குறைவுங்கிறதால, 'கொரோனா'வுக்கு அப்புறம் இரவு சவாரி போக ஆரம்பிச்சேன். ராத்திரியில நிறையபேர் வழி தெரியாம தவிக்கிறதைப் பார்த்ததால, 'இனி ராத்திரி மட்டும்தான் சவாரி'ன்னு முடிவு பண்ணிட்டேன்!கடந்த 23 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த உஷாவிற்கு வயது 49. இதுவரை, திக்கு தெரியாமல் நின்ற நான்கு பெண்களை மீட்டு பாதுகாப்பாய் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்.விபத்திற்குப் பின்...அடிபட்ட நாள்ல இருந்து இடுப்புல பெரும் வலி! 'எலும்பு உடைஞ்சிருக்கு; ரெண்டு இடங்கள்ல விரிசல் இருக்கு'ன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ஒரு மாதமா படுக்கையில கிடந்தேன்; இப்போ தான் ஓரளவு நடக்குறேன்!இவரது வருமானத்தை நம்பியே இருக்கிறது குடும்பம்! போதைக்கு அடிமையான கணவரால் தனியொருத்தியாக குடும்ப பாரம் சுமக்கிறார் உஷா. அம்மாவோட வலி பெருசா தெரியலையா மணி?'புரியுதுங்க... அதை உணர்ந்துதான் சின்ன வயசுலேயே சைக்கிள் மிதிச்சு பேப்பர் போட்டேன்; இப்போ வேலை இல்லை; சீக்கிரமே...' இடைமறிக்கும் உஷா, 'அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்; ஆனா, வெளிக்காட்டத் தெரியாது' என்று தாய்மை பேசுகிறார்; மணி எனும் மணிகண்டன் உஷாவின் மூத்த மகன்! தங்கையின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'கொரோனா' பாதிப்பால் இறந்துவிட, இப்போது தங்கையையும், அவரது மகனையும் தன்னுடன் வைத்து பொறுப்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறார். உஷா மீண்டும் ஆட்டோ ஏறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறது குடும்பம். விரைவில் நலம் பெறுக!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !