பெண் பார்வை!
'தயவுசெய்து குழந்தைகளை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புங்க! குழந்தை களை பள்ளிக்கு அனுப்பாத பெத்தவங்க எல்லாரும் குற்றவாளி!' - இப் படி, சி-4 பென்னாலுார்பேட்டை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பரமசிவன் 'கல்வி கடமை' ஆற்றிய வீடியோ பார்த்து, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினது ஊரறிந்த விஷயம்!இச்சம்பவம் நிகழ்ந்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, வள்ளுவர் நகர், இருளர் பழங்குடியின குடியிருப்பின் 'பெண்கள் பார்வை' என்ன?சென்சம்மா நாகராஜ்என் மூத்த மகன் பிளஸ் 2 முடிச்சும் கல்லுாரிக்கு அனுப்ப காசில்லை; இப்போ, கூலி வேலைக்குப் போறான். பத்தாவது படிச்சிட்டு இருக்குற இளையவன் கல்லுாரிக்கு போவானான்னு நான் வணங்குற சென்சம்மா அம்மனுக்கு மட்டும்தான் தெரியும்!அம்முலுஎன் வீட்டுக்காரரை 'டாஸ்மாக்' கொன்னுருச்சு. மனநலம் பாதிச்ச ஏழு வயசு மகனுக்கு 'ஆதார் அட்டை' இல்லைங்கிறதால உதவித்தொகை கிடைக்கலை! 'ஆதார் அட்டை' இருந்தும் 'குடும்ப அட்டை' இல்லாததால எனக்கு 'விதவை உதவித்தொகை' இல்லை. என் பிள்ளைக வயிற்றுப்பசியாறத் தான் பள்ளிக்கூடமே போகுதுங்க!அருகாமையிலுள்ள வள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் 42 மாணவர்களில், பாதிக்கும் மேல் இந்த இருளர் குடியிருப்பு குழந்தைகளே!எல்லம்மாள்பள்ளிக்கு போற ஒத்தையடி பாதை தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாயிருது. இயற்கை உபாதைகளுக்கு இன்னும் திறந்தவெளிதான்! பாதுகாப்பில்லாத சூழலாலதான் பெண் குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் பண்ணி வைச்சிடுறோம்!பென்னாலுார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021-- - 22ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி, 'கடைசி பெஞ்சுல உட்கார வைக்கிறாங்க' என்பதால் படிப்பை நிறுத்தி இருக்கிறார். இது, ஒரு சோறு பதம்!சென்சம்மா அர்ஜுனன்மழைக்கு ஒழுகுற குடிசை வேய்ஞ்ச மண்வீட்டுல பேரன், பேத்திகளோட பாடப் புத்தகங்களை பாதுகாக்குறது பெரும் சிரமம்!அப்போ... அந்த அதிகாரியோட அறிவுரை?அன்னைக்கு தமிழ் பரிட்சை எழுதிட்டு வந்த என் பேத்திக்கு அவரைப் பார்த்த பதற்றத்துல ஜுரம் வந்து, அடுத்த நாலு பரிட்சையையும் எழுதலை. பரிட்சை துவங்கினதால பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்ச என் பேத்திக்காக, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியைகிட்டே கலந்து பேசி இந்த சிறப்பு வைத்திய ஏற்பாட்டை செஞ்சது எங்க வார்டு மெம்பர் பவானியம்மா!அவங்க எடுத்த வீடியோ பிரபலமாயிருச்சு; ஆனா, எங்க நிலைமை மாறலை! காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் எங்க குடியிருப்புக்கு ஒருதடவை வந்து பார்த்தா எங்க வாழ்க்கை சூழல் அவருக்கு புரியும்.