உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை

அந்த மழைநாளின் தன் ஆனந்தக்கண்ணீரை இன்னும் காயாமல் வைத்திருக்கிறார் 22 வயது பார்கவி. அன்று பள்ளி விழா மேடையில், தங்கமீன்கள் படத்தின் 'ஆனந்த யாழை..' தன குரலால் மீட்டிவிட்டு அவர் இறங்கியதும்...'அடி கோயில் எதற்கு... தெய்வங்கள் எதற்கு...உனது புன்னகை போதுமடி...'ன்னு நீ பாடினப்போ, என் கைகளுக்குள்ளே நீ இருந்த மாதிரி உணர்வு; எனக்கு இது போதும்டா!' கன்னம் வருடி அப்பா சொல்ல, பார்கவியின் மனதிற்குள் மழை! எப்போதுமே பார்கவி இப்படித்தான்; தன் கண்ணீர் அப்பாவை கரைத்து விடக்கூடாதென்று கவனமாக இருப்பார்.

'அப்பா'ன்னா அவ்வளவு இஷ்டமா?

பின்னே... நான் இப்படி பிறந்ததும், 'இந்த பிள்ளை வேண்டாம்ப்பா'ன்னு எல்லாரும் சொன்னப்போ, 'என் பிள்ளை எனக்கு வேணும்'னு அடம்பிடிச்சவர் அவர்தான்! நான் இப்படி இருக்குறதுக்கு கடவுள் காரணம்னா, நான் இருக்குறதுக்கே என் அப்பாதான் காரணம்!

பார்கவி பார்வையில அப்பா மட்டும்தான் நல்லவரா?

என்னைச் சுற்றி இருக்குற என் நண்பர்கள் எல்லாரும் 'உன்னால முடியும்'னு அடிக்கடி சொல்றாங்க. என் தம்பி எனக்கு அம்மாவா இருக்குறான். அவனே அம்மாவா இருக்குறான்னா, அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லணுமா... என் உலகம் நல்ல மனிதர்களால நிரம்பியிருக்கு!மதுரை திருப்பாலையைச் சேர்ந்த பார்கவி, அதீதமாய் தோலுரியும் 'கொலோடியன்' நோய் பாதிப்பால் உடல் எலும்புகள் வலுவிழந்தவர்!

உங்க நம்பிக்கைகள் என்னென்ன?

நான் தாழ்வு மனப்பான்மை இல்லாத பெண். இந்த உலகத்துல என்னைவிட அன்பானவங்க யாரும் கிடையாது. என்னை விட அழகானவங்களும் இல்லை. தன்னம்பிக்கையில என்னை மிஞ்ச யாராலும் முடியாது! 'உன் பாட்டை கேட்டா மனசு லேசாயிடுது'ன்னு நாலு பேர் சொல்ற அளவுக்கு நான் நல்லா பாடுவேன்!அம்மா, அப்பா, தம்பி, பாட்டிகளோடு வசிக்கும் பார்கவி எதிர்கொள்ளும் அன்றாட வலி கொடுமையானது! வெயில் தீண்டினால் தோலுரிந்த இடங்கள் தீ பட்டது போல் எரிச்சல் தரும். பனிக்காலத்தில் தசைகள் சுருங்கி வலி தெறிக்கும். அதனால் என்ன, 'இதுவும் கடந்து போகும்' என்று கல்லுாரி செல்கிறார் இந்த எம்.காம்., மாணவி!

'பெண் ஜென்மம்' மகிழ்ச்சிக்குரியதா?

'இந்த மண்ணில் என் போல் யாருமிங்கே...எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!'நம் கேள்விக்கு பதிலாய், 'ஆனந்த யாழை...' நமக்காகவும் பார்கவி மீட்டினார். நல்ல குரல் வளம். 'பின்னணி பாடகி' கனவுடன் மூன்று ஆண்டுகளாக முறைப்படி இசை பயில்பவரது ஆசையை காலம் நிறைவேற்ற வேண்டும்; பிரார்த்தித்துக் கொள்வோம்.

பா.பார்கவியின்புதுப்புது அர்த்தங்கள்

தனிமை? - நிறைவுஇசை? - உயிர்அழகு? - மனசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !