இதயத்திருடி
சொந்த வேலையாக சென்னைக்கு ரயில் பயணம். டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றிருந்த நான், கையிலிருந்த கவிதை புத்தகத்திற்குள் கரையத் துவங்கினேன்.'சுபாஷு...' - என் தலை உயர்த்தியது ஒரு குரல்.'என்னை தெரியலையா சுபாஷு?' என்றாள் புன்னகையுடன்.'நீ கல்பனாதானே!' என்றேன். விரலோடு சேர்த்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள். மென்மையும், குளிர்ச்சியும், சிநேகமும் கூடிக் கிடந்தன அவளது கையில்!'சுபாஷு... இது எம் பொண்ணு அர்ச்சனா; அஞ்சாவது படிக்கிறா!'அதற்காகவே காத்திருந்த குழந்தை இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து நடு நெற்றியில் கை வைத்து, 'வணக்கம்' என்றது. 'நல்ல வார்ப்பு' என்று சொல்லிக் கொண்டேன்.'உனக்கு ஸ்கூல்ல கவுதம் மாதிரி, அம்மா ஸ்கூல்ல படிக்கும் போது சுபாஷு தான் பெஸ்ட் பிரெண்ட்' என்றாள். குழந்தையின் பார்வையில்... இதமும், அங்கீகாரமும்!'அம்மா... அப்பா வந்துட்டாரு!' வாசல் நோக்கி கை காட்டியது குழந்தை. சட்டென்று என் கையை விடுவித்து இரண்டடி பின்னே நகர்ந்துகிளம்பினாள் கல்பனா. செல்கையில்...'அர்ச்சனா... அம்மா இந்த அங்கிளைப் பார்த்தேன்னு அப்பாகிட்டே சொல்ல வேண்டாம்!' என்றாள். 'எப்பவுமே சொல்ல மாட்டேம்மா!' என்றது, தகப்பனின் குணம் உணர்ந்த அந்த தேவதை.படைப்பு: கல்பனா (அப்பத்தா சிறுகதைகள்)எழுதியவர்: பாரதி கிருஷ்ணகுமார்வெளியீடு: தி. ரூட்ஸ்