இதயத்திருடி
செல்வகுமார் கோட்டப் பொறியாளர்; சாந்தா, அவன் கட்டுகிற வீட்டில் சித்தாள்.சாந்தாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். தனக்கு மனைவி இருக்கிறாள்; இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன; 50 வயது ஆகப்போகிறது என்றாலும், சாந்தா மீது இருந்த ஆசை செல்வகுமாரை காலி செய்துவிட்டது.சித்தாள்களுக்கும், கொத்தனார்களுக்கும் அவன் டீ, வடை வாங்கித் தருவது தனக்காகத்தான் என்பது சாந்தாவுக்கு தெரியும். எந்த இடத்திலும் அவள் இந்தளவிற்கு ஈடுபாட்டுடன் வேலை செய்தது கிடையாது.சாந்தாவின் வீட்டில் அவள் முன் உட்கார்ந்திருந்தான் செல்வகுமார். பணக்கட்டு ஒன்றை அவளிடம் நீட்டினான்.'நான் தனியாளு இல்ல சார்; என்ன தலை குனிய வைச்சிடாதீங்க! மனசுல அழுக்கு இல்லாம, பாரம் இல்லாம இருக்கேன்; இது போதும் எனக்கு! கடவுள் உங்க மனசை கெடுத்துட்டான்; எம் மனசை கெடுக்காம இருக்கணும்!' - சாந்தா சொன்னதும் பணத்தை சேரில் வைத்துவிட்டு நகர்ந்தான் செல்வகுமார். 'உங்க வீட்டு வேலை முடியுற வரைக்கும் நான் வரணும்னு நினைச்சீங்கன்னா பணத்தை எடுத்துட்டுப் போயிடுங்க!' திகைத்துப் போன செல்வகுமார், 'சரி... அதை எடுத்துக்கிட்டு வா' என்றான். 'நீங்களே வந்து எடுத்துக்கிட்டுப் போங்க!''பெரிய ராங்கிக்காரிதான்' சொல்லியபடியே பணத்தை எடுத்துப் போனான்.படைப்பு: 'சாந்தா' சிறுகதைஎழுதியவர்: இமையம்வெளியீடு: க்ரியா