விடியும் வரை கிறுக்குவேன்
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை குற்றமாக பேசுபவர்களே... குறை வெளிச்சத்திலும் சிகிச்சை தந்த 'திராவிட மாடல்' அரசின் சாதனை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?ஊட்டச்சத்து குறைபாடுள்ள பாலுாட்டும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம். ஆஹா... இது போதுமே... அப்பெண்களின் ஏழ்மைக்கு கணவன்மார்களின் குடிப்பழக்கம் காரணமா என்பதை நான் ஏன் சிந்திக்க வேண்டும்? 'அரசு மருத்துவரை குத்தி விட்டான்' எனும் செய்திதான் என் காதுகளுக்கு அருகில் கேட்டதே தவிர, 'எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லை' எனும் குத்தியவனின் குடும்ப கதறலை நான் கேள்விப்படவே இல்லை! 'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பதில்லை' என்ற உயர் நீதிமன்ற கண்டனத்தை, 'நவீன தமிழகத்தின் சிற்பி' என நம் முதல்வரால் போற்றப்படும் அவர் கேட்டிருந்தால் துடித்துப் போயிருப்பார். நல்லவேளை... காலமாகி விட்டார்! 'வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' எனக்கூறி டில்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் ராஜினாமா செய்த செய்தி பார்த்தும் எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் எழவில்லை. 'தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்' என்று நம் முதல்வர் அடிக்கடி சொல்வது சத்தியவாக்கு.