உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட்போன் வணிகத்துக்கு பை.. பை..

எல்.ஜி., நிறுவனம், ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறுவது குறித்து சிந்தித்து வருகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில், போட்டிகள் எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்ட நிலையில், மேற்கொண்டு ஸ்மார்ட்போன் வணிகத்தை தொடர வேண்டுமா என்ற சிந்தனைக்கு எல்.ஜி., நிறுவனம் வந்துவிட்டது.போட்டிகள் அதிகரித்து விட்ட நிலையில், ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவது குறித்து நிறுவனம் ஆலோசித்து வருகிறது.முழுவதுமாக வெளியே வந்துவிடுவதா; அல்லது, சிறிய அளவில் மட்டும் செயல்படுவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக விலை குறைவான போன்களை விடுத்து விலை அதிகமான பிரீமியம் வகை போன்களை மட்டும் கையாள்வது குறித்தும் பரிசீலித்து வருகிறது. அத்துடன் விற்பனை, வாபஸ் பெறுவது, ஊழியர்கள் என அனைத்து வித அம்சங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறும்பட்சத்தில், ஊழியர்களை பொறுத்தவரை, முதல்கட்டமாக, 60 சதவீதம் பேரை நிறுவனத்தின் வேறு வணிகப் பிரிவுகளுக்கு மாற்றிவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.போட்டிகள் அதிகரித்த நிலையில், அண்மையில், செலவுகளை குறைக்க வெளியிலிருந்து தயாரித்து வாங்கி, எல்.ஜி., பிராண்டில் விற்கும் முயற்சியையும் நிறுவனம் எடுத்தது. குறிப்பாக விலை குறைந்த போன் மாடல்களை அவுட்சோர்சிங் செய்து வந்தது. ஆனாலும் நஷ்டங்களை தவிர்க்க முடியவில்லை. எல்.ஜி., நிறுவனம் கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும், ஸ்மார்ட்போன் வணிகத்தில், 32 ஆயிரத்து, 850 கோடி ரூபாயை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எல்.ஜி., நிறுவனம் அனேகமாக அதன் ஸ்மார்ட்போன் வணிகத்தை வியட்னாமைச் சேர்ந்த வின்குரூப் நிறுவனத்துக்கு விற்கக்கூடும் என்றும் தகவல்கள் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !