உள்ளூர் செய்திகள்

அரசியலை சேவையாக தொடரும் அமெரிக்கா தமிழர்

கண்ணன் சீனிவாசன் 2023 ஆம் ஆண்டு வர்ஜீனியா ஹவுஸ் ஆஃப் டெலிகேட்டுக்கு ஜனநாயக கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கா தமிழர். இவரை அமெரிக்கா பயணத்தில் இருக்கும் நான் சமூக சேவையில் இருக்கும் மகள் அபர்ணாவுடன் சென்று சந்தித்தேன். எங்களுடன் அங்கு மென்பொருள் நிறுவனம் நடத்தும் எழுத்தாளர் சத்யராஜ்குமாரும் இணைந்துக்கொண்டார். கண்ணன், அவர் பகுதியைச் சார்ந்த குடியிருப்பாளர்களின் கல்வி,உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகவும் அனைத்து வர்ஜீனியா குடும்பங்களை மேம்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவை பொருத்தவரையில் கண்ணனின் இந்த பதவி வருமானம் தரக்கூடியது இல்லை. இருப்பினும் இவர் சேவை மனப்பான்மையுடன் செயல் படுவது விசேஷம். இவரின் மனைவியும் கூட தீவிர சேவையாளர். இவரது நேர்மை, எளிமை, மனிதாபிமானம், அரசியல் வித்யாசம் இல்லாத சுமூக இணக்கம் எல்லாம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. கண்ணனுக்கு தினமலர் அந்துமணியின் தாமரை பதிப்பக பா.கே.ப நூலின் 23 ம் தொகுதியும், எனது சில நூல்களும் கொடுக்க மகிழ்ந்தார். ௩௨ வருடம் அமெரிக்காவில் வாழ்த்தாலும் கூட இந்த தம்பதிகள் தமிழை மறக்காமல் அதே பற்றுடன் இருந்து வருகிறார்கள். யார் இந்த கண்ணன் சீனிவாசன்? கண்ணன், சென்னை சாந்தோம் பள்ளிபடிப்புக்குப் பின் காலையில் CA படிப்பு மாலையில் பி.காம் - என்று தனது 21ஆம் வயதில் முதல் முயற்சியிலேயே CA முடித்தவர். அத்தோடு திருவல்லிக்கேணியில் 5 வருட CA பிராக்டீஸ்!. நான்கு மாநிலத்தின் நூற்பாலைகளுக்கும் கோ - ஆபரேட்டிவ் ஸ்பின்னிங் மில் அசோசியேஷனுக்கும் அவர் ஸ்பெஷல் கன்சன்டண்ட்டாக அப்போது இருந்தார். கண்ணனின் தந்தை S.T. ஸ்ரீனிவாசன் வரலாறு ஆசிரியயர். தமிழ் ஆசிரியையான அம்மா சூடாமணியின் தமிழ் ஆர்வம் கண்ணனிடமும் ஊட்டப்பட்டிருந்தது. கண்ணனின் மனைவி ஜெயஸ்ரீ சென்னை IIT யில் படித்தவர். கண்ணனின் சேவைக்கு தூண்டுதலே மனைவிதான்! அந்த சேவை என்பது பெயர்-- புகழ்- சம்பாத்யத்துக்கானது அல்ல. பொது தொண்டுக்கானது. அவரது பாரம்பரியம் அப்படி! ஜெயஸ்ரீயின் தாத்தா டாக்டர் S.வரதாச்சாரி மாயவரத்தில் சொந்த கிளினிக் நடத்தி அந்த நாட்களில் மிகப் பிரபலம்! அங்கு டவுன் கவுன்சில் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். அப் பகுதியில் மதிப்புமிகு தலைவராக இன்றும் மக்களால் கொண்டாடப் படும் அவர் காமராஜரின் நெருங்கிய நண்பர். அவரது சேவைக்காகவே - அங்கு தெரு, மற்றும் பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு ஆடிட்டிங் சார்ந்த மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்ற கண்ணன்,அங்கு ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி , பிறகு ஒரு ரெஸ்டாரண்ட் குரூப்பிலும் சில காலம் பணியாற்றினார். தந்தை மாரடைப்பில் இறந்ததும், கண்ணனன் விபத்துக்குள்ளாகி பெரிதும் கஷ்டப்பட்டதும் அதுபோல வேறு யாரும் கஷ்டப் படக்கூடாது என்று இவரை மருத்துவ சேவை பக்கம் திருப்பி விட்டுள்ளது. கண்ணன் Leesburg - Virginia, Loudoun இலவச கிளினிக்கின் போர்டு மெம்பராக இருக்கிறார். அது தவிர மேலும் பல இலவச கிளினிக்குகளுக்கு நிதி உதவியும் செய்து வருகிறார். இவர் சிறந்த பேச்சாளர்! பொருளாதாரக் கட்டுரைகள் படைக்கும் எழுத்தாளர்! பெரும் புள்ளிகளை பேட்டி கண்டும் எழுதியிருக்கிறார்.இது இவரது அரசியல் களத்திற்கு பலமாகி இருக்கிறது. செய்யும் தொழில் மூலம் கிடைத்திருக்கும் தொடர்புகள் இவருக்கு மேலும் வலு சேர்க்கின்றன. கண்ணனை பொறுத்தவரை ஈகோ கிடையாது. எதிர்க்கட்சினரும் விரும்பும் - நேசிக்கும் அளவுக்கு இவரது அணுகுமுறை இருக்கும். இருக்கிறது! எந்த காரியத்தையும் சுமூகமாய் அணுகுவார். அதற்காண நல்ல தீர்வுக்காக பாடுபடுவார். மனைவியுடன் சேர்ந்து நேரடியாய் களத்தில் இறங்கி பணியாற்றுவது இவரது சிறப்பு. இதனால் இங்கு வாழும் இந்தியர்களுடன் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் இவருக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்கா தேர்தலில் ஜெயித்த மெம்பர்களுக்கு பெரிய சம்பளமோ, வசதிகளோ கிடையாது. வருடத்தில் ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதம் மட்டும்தான் அசெம்பிளி கூடும். அதன் பின் 10 மாதங்கள் அவர்கள் தங்கள் தொகுதி. மக்களுடன் இருக்க வேண்டும். கண்ணன் ஸ்ரீனிவாசன், பொது சேவைக்கு - வேண்டி மட்டுமே அரசியலை தேர்ந்தெடுத்துள்ளார். அரசியலை சேவை செய்யும் களமாக பயன்படுத்தும் இவரின் கொள்கைக்கு ஒரு ராயல் சல்யூட் ! - என்.சி.மோகன்தாஸ் with அபர்ணா விஜய்; படக் கலவை; வெ.தயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்