முருகன் திருக்குன்றம், சிங்கப்பூர்
முருகன் திருக்குன்றம், 1962 ல் ஆர்.ஏ.எப். தண்ணீர் விநியோகத் தொழிலாளியான சண்முகத்தால் 'லாம் சான்' கிராமத்தில் தொடங்கப்பட்டது. இவர் ஸ்ரீ முனீஸ்வரர் போன்ற ஒரு தெய்வச் சிலையை, ஓரு கிராமத்தில் கண்டெடுத்தார். இதைப்பற்றி தொழிற்சங்கக் கூட்டத்தின் போது தன் நண்பர்களிடம் தெரிவித்தார். இன்றைய கோவில் தலைவரான நாகலிங்கம், அன்று ஓர் உறுப்பினராக இருந்தார். 1962 ஆம் ஆண்டு, அக்கிராம மக்கள் மற்றும் ஆர்.ஏ.எப். ஊழியர்கள் உதவியுடன் முதல் பூஜை நடைபெற்றது. ஒரு வருடம் கழித்து சுற்று வட்டாரத்தை சுத்தப்படுத்தும்போது பக்கத்துக் குடியிருப்புகளுக்குத் தீ பரவி விட்டது. நிலச் சொந்தக்காரர் செய்த புகாரின் பேரில், ஆலய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.இவ்வேளையில், ஒரு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாகலிங்கத்தின் கனவில் வெண்ணிற ஆடையணிந்த முதியவர், கதவைத் தட்டி, 'கோவிலுக்குப் போய் எப்பொழுதும் போல் விளக்கேற்றி பூஜை நடத்து. உனக்கு நன்மை உண்டாகும்' , என்று கூறினார். அதன்படி நாகலிங்கமும் அவரது நண்பர் பாப்பையா நாயுடுவும் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் உதவியுடன் மறுபடியும் பூஜைகள் செய்தனர். 1969 ல் நாடாளுமன்ற உறுப்பினர் டான் சி ச்சின் உதவியால் தற்காலிக அனுமதி கிடைத்தது.ஆனால் மீண்டும் தீ பரவியதால் அக்குடிசை இரையானது. மீண்டும் நாகலிங்கத்தின் கனவில் சிவந்த மேனியுடைய ஒருவர் வந்து ஆலயத்தை நிர்மாணம் செய்யும்படி தூண்டினார். ஆனால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பொறியாளர் அனுமதி கொடுக்கத் தயங்கினார். ஆனால் பிறகு மனம் மாறினார். இம்மாறுதல், இறைவன் செயல் என்று கூறப்பட்டது. இக்கோயில், அருள்மிகு முருகனைப் பிரதிஷ்டை செய்தபின் முருகன் கோவிலானது. ஜொகூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் குருக்களின் ஆலோசனையும் இதற்குக் காரணம்.1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி, சுமார் 2000 சதுர அடிபரப்பில் கோவிலுக்குத் தற்காலிக அங்கீகாரம் கிடைத்தது. அடுத்த மாதமே, 9 சுங்கை தெங்கா சாலை, சுவா சு காங், 12 1/2 வது மைல் என்ற முகவரியில் 'முருகன் திருக்குன்றம்' என்ற பெயரில் கோவில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டு பாப்பையா நாயுடு சாங்கி ஆர். ஏ. எப். க்கு மாற்றப்பட்டதால் நாகலிங்கம் தலைமைப் பொறுப்பேற்றார்.1983 ஆம் ஆண்டு காங் ஆ சூ, கட்டிட நிர்மாண பொறியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கட்டிட வேலை தொடங்குவதற்கான அனுமதி தாமதமானது. பல மனுக்கள் அனுப்பியபின், ஈராண்டுகள் கழித்து பதில் வந்தது. அது தற்போது உள்ள இடத்திலிருந்து காலி செய்ய வேண்டும் எனும் கட்டளையாகும்.வேறொரு இடத்தைப் பெறுவதற்குப் பல இன்னல்கள் நேரிட்டாலும், கோயில் செயலவை தன் நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில் அப்பர் புக்கிட் தீமா சாலை, 16 வது கிலோ மீட்டரில் தற்போதைய இடம் 455,273 வெள்ளிக்கு வாங்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்மாணத்திற்கு இன்னும் 1.5 மில்லியன் வெள்ளி தேவைப்பட்டது. சை ஹியாப் கட்டிட நிறுவனம் மாதத்தவணையாக 50,000 வெள்ளி பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. மெய்யன்பர்கள் தாராளமான நன்கொடையையும் பேராதரவையும் தொடர்ந்து தரும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். காங் பல வகைகளில் உதவி செய்தார். செவ்வாய் .. வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலுக்கு வந்த சுமார் 200 மெய்யன்பர்கள் நன்கொடை கொடுத்தனர். 1994 ல் கோவில் கட்டுமான வேலை தொடாங்கியது. அவ்வேளையில் பழைய செயலவைக்குழு மாறியது.புதிய ஆலயம் ஒரு மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. கீழ்த்தளத்தில் திருமண மண்டபமும் மேல் மாடியில் கோவிலும் அமைந்திருக்கிறது. முருகன், விநாயகர் மற்றும் சிவசக்தி ஆகிய கடவுளர்க்கு மூலஸ்தானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களோடு துர்க்கை, முனீஸ்வரன், மாரியம்மன், பெரியாச்சி அம்மன், லஷ்மி-நாராயணன், நாகர், பைரவர், இடும்பன், முனியாண்டி, நவக்கிரகங்கள் மற்றும் சீனக் கடவுளான குவான் இம் ஆகிய கடவுளர் இருக்கிறார்கள்.1962 லிருந்து பல மாற்றங்களுக்குள்ளாகி, 1998 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் முருகன் திருக்குன்றம் பூர்த்தியானது. ஆலய அமைப்புமுருகன் திருக்குன்றம் ஆலயம் அப்பர் புக்கிட் தீமா சாலையில் 16 கீ.மீட்டரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 சதுர அடி பரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு - முருகப் பெருமானின் ஆறு படை வீடுகள் எவ்வாறு மலைமீது அமையப்பட்டுள்ளனவோ, அதேபோல் அமைந்துள்ளது. ஆலயத்தின் கீழே திருமண மண்டபமும் மேலே ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ காசி விஸ்வநாதர் (சிவ-சக்தி) சன்னிதி அமையப்பட்டுள்ளது. ஆலய நுழை வாயிலில் ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. அதன் கீழ்புறத்தில் மூலவர் சன்னிதியில் உள்ளதுபோல் வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார். ராஜ கோபுரத்தின் நான்கு புறங்களிலும் நம்மை எல்லாம் கவரும் வண்ணமாக விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர், சிவன், சக்தி, நடராஜப்பெருமான், தெட்சணா மூர்த்தி, சரஸ்வதி, நாரதர், ரிஷிகள், வடிவேலு தம்பதியர், துவாரபாலகர், துவார சக்தி, மஹா விஷ்ணு, ரூத்ர தாண்டவர், மயூரதம், வேடன், தெய்வானை திருமணக்கோலம் போன்ற வடிவங்கள் நம்மை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளன.பிரகாரத்தின் தென்புறத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணரும் அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகவேந்திரரும், கன்னி மூலையில் ஸ்ரீ துர்கை அம்மனும் உள்ளனர். வாயுமூலையில் ஸ்ரீ நாகராஜருக்கு தனிச்சன்னிதி அமையப்பட்டுள்ளது. வடபுறத்தில் பெரியாச்சி அம்மனும் காளியம்மனும், சனி மூலையில் ஸ்ரீ முனீஸ்வரர் மேற்கு முகமாகவும் அமையப்பட்டுள்ளனர். இவ்விதமாக வழிபட்டுச் சென்று முருகப்பெருமான் சன்னிதியைக் காண வருக வருக என அழைக்கும் வகையாக தென்புறத்திலும் வடபுறத்திலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அவற்றில் ஏறி, ராஜகோபுர நுழைவாயில் வழியாக உள் பிரகாரம் வலம் வந்து, ஸ்ரீ விநாயகர் சன்னிதியில் வழிபட்டபின், ஸ்ரீ முருகனை வழிபடவேண்டும். அதன் பின் சிவன் .. சக்தியை வணங்கியப்பிறகு, நவக்கிரக வழிபாடு, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ இடும்பன் சன்னிதிகள், கொலுமண்டபத்தின் உற்சவ மூர்த்திகளை வணங்கவேண்டும்.உற்சவ மூர்த்திகளின் கண்கொள்ளாக் காட்சியைக் காணும்போது அகமகிழும். ஸ்ரீ முருகன் சன்னிதியில் சிறிது நேரம் தியானம் செய்யும் பொழுது நம்மை மகிழ்விக்கும் வகையில், (த்வஜஸ்தம்பம்) என்று சொல்லக் கூடிய கொடிமரம் பொன்னால் செய்யப்பட்டு, நம்மை இறைவழிபாட்டில் எந்நேரமும் ஈடுபடுத்திக் கொள்ள வகையூட்டுகிறது.விநாயகர் விமானம் கோஷ்டத்தில் விநாயகர் ஆவதாரங்களும், விநாயகர் சன்னிதியின் மேற்குப்புறத்தில் யானைகள் இருபுறமிருக்க, நடுவில் லட்சுமி சிற்பம் உள்ளது. முருகனுடைய விமானத்தின் நான்கு புறங்களிலும் ஆறுபடைவீட்டின் அமைப்புகள் போல அழகுற செய்யப்பட்டுள்ளன. சன்னிதி நிலை மேலே யானைகள் இருபுறமிருக்க, லட்சுமியும் கோஷ்டத்தின் தென்புறத்தில் தெட்சணாமூர்த்தியும் மேற்குப்புறம் மஹா விஷ்ணுவும் வடக்குப்புறம் பிரம்மாவும் அமைந்துள்ளனர்.முருகன் சன்னிதியில் தைப்பூச விழாவன்று பக்தர்கள் பாலாபிஷேகம் கண்டு உய்க்கும் வண்ணம், பொன்னால் செய்யப்பட்ட வேல் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்து சிவசக்தி சன்னிதியின் நிலைக்குமேல், யானைகள் இருபுறமிருக்க, தனலட்சுமி சிற்பம் காட்சியளிக்கிறது. விமானத்தில் சிவசக்திக்குரிய ரிக்ஷப வாகனமும் மற்றும் பூதங்களும் அமைந்துள்ளன. சன்னிதியின் தென்புறத்தில் கொடுங்களூர் பகவதி அம்மனும், மேற்குப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரரும், வடக்கில் துர்க்கையும் அமைந்துள்ளனர்.