உள்ளூர் செய்திகள்

தமிழ்மற்றும் புலம்பெயர் தமிழர்ஆய்வுநிறுவனம், மியாமி, அமெரிக்கா

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 90முதல் -100 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் எஞ்சி இருக்கும் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். இதன் வரலாறு, இலக்கியம், கலை, கலாச்சாரம், பண்பாட்டுப் பதிவுகள் இதன் பழமைக்கோர் சான்று. மொழி மற்றும் வரலாறு மட்டுமல்லாது தமிழ் மொழியின் கலைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் ஒரு வலுவான தன்னிறைவு பெற்ற நிறுவனமாக, மியாமியில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர்ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது தொடர்ந்து தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவார்ந்த ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலைச் செயல்படுத்தும் ஓர் உயர் ஆற்றல்மிகு தமிழ் நிறுவனத்தை உருவாக்கி வருகிறது. வேறுபட்ட தளங்களில் பல்வேறு களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அறிவார்ந்த பெரியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டு பல புதிய நிகழ்வுகளை உலகெலாம் நடத்தி வருகின்றது.மேலும், நவம்பர் 2022 இல் தனது தமிழ் பரப்பும் பணியை, கலை கலாச்சார பண்பாட்டுக் கடிகாரத்தை உலகெலாம் திரும்பிப் பார்க்கும் வண்ணம் தொடங்கி வெற்றிகரமான தனது பணிகளைச் செய்து வருகிறது தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர்ஆய்வு நிறுவனம். மற்ற பல்கலைக் கழகங்களில் தனிப்பட்ட தமிழ் இருக்கைகள் நிறுவப்பட்டிருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளடக்கிய தமிழ் ஆய்வு மற்றும் கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பு கொண்ட நிறுவனத்தின் தேவை அவசியமாகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கும் மொழி மற்றும் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது இந்நிறுவனத்தின் இலக்காகும்.இந்நிறுவனத்தின் சின்னமே (logo) தமிழ் மொழியைத் தன்னுள் பதித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. அன்பெனும் ஆதிமொழியாம் தமிழை ஆழ்ந்து உணரும் இதயங்கள் இந்த சின்னத்தை இரசிப்பதை நேரில் காண இயலும். பனை ஓலை வடிவத்தில் தொல்தமிழ் இலக்கண இலக்கிய நூல் தொல்காப்பியம், தமிழ் ஆதி இசைக்கருவி பறை, தமிழில் முதல் நரம்புக் கருவி யாழ், தொன்மையான நாட்டியக்கலை பரதநாட்டியம், பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, பழமையான தமிழர் தற்காப்பு கலைசி லம்பம், தமிழர்தம் தொன்மைக்கு பெருமையும் உயிரோட்டமும் தரும் அகழ்வாராய்ச்சிகள், தொன்மையான உயிரினமும் மிகவும் வலிமையுள்ளதாய் இருப்பினும் தமிழனால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட மிருகம் யாழி, தொல்தமிழின் ஈரடி வேதமும் தமிழரின் வாழ்க்கை வழிகாட்டியும் உலகப் பொதுமறையுமான திருக்குறள், தமிழ் நிலத்தின் அடையாளமும் தமிழ்நாடு மற்றும் புளோரிடா மாநிலங்களின் மாநில மரமான பனைமரம் இவைகளுடன் மெய்உயிர் இயைந்த ஆன்ம மற்றும் அறிவொளி வீசும் அகல்விளக்கு என அத்தனையும் பதித்து கேடய வடிவில் நம் தமிழ்மொழி காக்கும் ஒரு அற்புதமான சின்னம் அனைவர் மனதையும் கவர்ந்ததில் வியப்பென்ன? நம் தாய்மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பழமையையும் பாரம்பரியத்தையும் மேம்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் போற்றும் விதமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் வெற்றிக்குப் பொதுமக்களின் தொடர்ச்சியான ஈடுபாடும் ஆதரவும் இன்றியமையாதது. இதுபோன்ற கூட்டு முயற்சிகள் மூலம் அறிவார்ந்த பரிமாற்றம் மற்றும் சமூக இணைப்புக்கான பல்வேறு தளங்களை உருவாக்க இயலும். இனி தழைத்தோங்கும் நமது இளையோருக்கும் வழிகாட்டுதலாகவும் அமையும் என்பது உறுதி.நம் தமிழ் மொழியின் தொன்மையை, தனித்துவத்தை, நீண்ட நெடிய பயணத்தை, உயிரோட்டத்தை உணர்ந்து உலகெல்லாம் விரவிப் பரவியுள்ள தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் உயிரிழையாய் இந்நிறுவனம் அமையும் என்பது ஆணித்தரமான உண்மை. - தினமலர் வாசகி சுசிலாமணிக்கம், தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !