ADDED : அக் 15, 2026 01:34 PM

படிப்பில் நம்பர் 1 ஆக சரஸ்வதியை நாம் வழிபடுகிறோம். ஆனால் சரஸ்வதி பல தலங்களில் சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள். சரஸ்வதி வழிபட்ட கோயில்களை தரிசித்தால் படிப்பு, இசை, பாட்டு, நடனம், ஓவியம் என அனைத்திலும் கொடி கட்டி பறப்பீர்கள்.
* நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் திருமறைக்காடர் சிவன் கோயில். இங்கு வீணை இல்லாமல் சரஸ்வதி இருக்கிறாள். இவளை 'ஆதிசரஸ்வதி' என்கின்றனர்.
* திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் உள்ளது வீழிநாதேஸ்வரர் கோயில். இங்கு மூன்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.
* தஞ்சாவூர் மாவட்டம் மேலை திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் எழுத்தாணி, சுவடியை ஏந்தியபடி நான்கு கைகளுடன் சரஸ்வதி இருக்கிறாள்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலில் பிரம்மாவும், சரஸ்வதியும் உள்ளனர்.
* முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளான சரஸ்வதி காளஹஸ்தியில் தீர்த்தம் உண்டாக்கினாள். அதில் நீராடி சிவனை தரிசித்து விமோசனம் பெற்றாள்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சரஸ்வதி தீர்த்தம் உண்டாக்கினாள். அதுவே இப்போது காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தமாக உள்ளன.
