உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா அனுபவத்துக்காக படம் தயாரிக்கிறார்கள்

சினிமா அனுபவத்துக்காக படம் தயாரிக்கிறார்கள்

வல்லதேசம் படத்தை இயக்கிய என்.டி.நந்தா தற்போது இயக்கி வரும் படம் குறுக்கு வழி. லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழரான நந்தா, அடுத்து சில பல கோடி ரூபாய் செலவில் பெரிய படம் ஒன்றை உருவாக்க இருக்கிறாராம். அதற்கு பயிற்சி பெறுவதற்காக குறுக்குவழி என்ற படத்தை இயக்கி வருகிறாராம். இந்த படத்தில் புதுமுகங்கள் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சிங் மற்றும் ஏ.ஷர்மா இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் என்.டி.நந்தா கூறியதாவது : நான் இதற்கு முன்பு 2017ல் வெளியான வல்ல தேசம் என்ற தமிழ்ப் படத்தைத் இயக்கினேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறேன், அதற்கு நான் ஒளிப்பதிவும், செய்துள்ளேன். நாங்கள் இப்படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம், 2022ல் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம்.

இதற்கிடையேயான தருணத்தில் தான் குறுக்கு வழி என்ற திரைப்படத்தை உருவாக்கத் துவங்கினோம். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இணையாக தொழில்நுட்ப மற்றும் கதை அம்சங்களில் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு.

அடுத்தடுத்து எனது இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படங்கள் பிரமாண்டமாகவும் பெரிய அளவிலும் உருவாக்கப்படும். ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். கொரோனா தொற்றுநோய் கட்டத்தின் கடினமான காலங்களில் கூட என் கனவை கைவிடவில்லை. அந்த நேரத்தில் நான் இங்கேயே தங்கி, திரைப்படத்தை முடிக்க முடிவு செய்தேன்.

அதற்கான பயிற்சிகளை பெறவும், தமிழ் சினிமா பற்றி நானும், தயாரிப்பாளர்களும் அனுபவ ரீதியான பாடத்தை பயிலும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். எங்கள் திறமையை வெளிப்படுத்தும் முதல் கட்டமாக குறுக்கு வழி திரைப்படம் இருக்க வேண்டும் என, இப்படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளோம், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த இடங்களிலேயே படமாக்கியிருந்தாலும், இப்படம் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் இருக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !