‛தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்
‛தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு வரவேற்பு இல்லை எனக்கூறி தமிழக தியேட்டர்களில் படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் படத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக படத்தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: ‛‛தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎப்சி) சான்றிதழை படம் பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. பொதுமக்களின் சகிப்புத்தன்மையை சோதிப்பதற்கு, சட்ட விதிகளை கேள்வி கேட்கக்கூடாது.
தியேட்டர்களுக்கும், படம் பார்க்க செல்வோர்களுக்கும் தேவைப்பட்டால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்ததும் இந்த படத்தை பார்க்க உள்ளோம். குறிப்பிட்ட ஒரு சிலர் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும்?'' என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
தடை கூடாது
நீதிபதிகள் மேலும் கூறுகையில் ‛தமிழகத்தில் ‛தி கேரள ஸ்டோரி' படத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்யக்கூடாது. படத்தை தடுக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அதை அனுமதிக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது அந்தந்த மாநில போலீசாரின் கடமை' என்றனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்திற்கு தடை விதிப்பது போன்ற எந்த செயலிலும் ஈடுபடவில்லை எனக்கூறியதை, உச்சநீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.