2026 : அடுத்தடுத்து வெளியாக உள்ள பான் இந்தியா படங்கள்
பான் இந்தியா படங்கள் என்பது கடந்த சில வருடங்களில் பிரபலமாகிவிட்டது. ஒவ்வொரு மொழியிலும் டாப் நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்தப் படங்களை பான் இந்தியா படங்களாகத்தான் வெளியிடுவோம் என்று அடம் பிடித்து வெளியிடுகிறார்கள் சிலர். ஆனால், அப்படியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டும்தான் உண்மையான பான் இந்தியா வெற்றியைப் பெறுகின்றன.
இந்த 2026ம் வருடத் துவக்கத்தில் முதல் பான் இந்தியா படமாக பிரபாஸ் நடித்து தெலுங்கில் தயாரான 'தி ராஜா சாப்' படம் சங்கராந்திக்கு வெளிவந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இந்தக் கதையை எல்லாம் வைத்துக் கொண்டு எப்படி பான் இந்தியா என்று சொல்லிக் கொண்டார்கள் என்ற கடுமையான விமர்சனமும் வந்தது.
இந்த வருட ஆரம்பமே பான் இந்தியா படங்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களில் சில முக்கிய படங்கள் திரையுலகினரின் எதிர்பார்ப்பையும், ரசிகர்களின் ஆர்வத்தையும் பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.
டாக்சிக்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையமைப்பில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், அக்ஷய் ஓபராய் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் கன்னட, ஆங்கிலப் படம்.
2022ல் வெளிவந்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு சரியான பான் இந்தியா ஆக்ஷன் ஹீரோ எனப் பெயரெடுத்தவர் யஷ். அந்தப் படத்திற்குப் பிறகு சில பல கதைகளைக் கேட்டு பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் சொன்ன கதை, அவரைக் கவர அதைத் தேர்வு செய்தார். படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்த, யஷ் கதாபாத்திர அறிமுக வீடியோ சர்ச்சையை ஏற்படுத்த படம் வெளியீட்டிற்கு முன்பாகவே மிகவும் பிரபலமாகிவிட்டது.
மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் 'கேஜிஎப் 2' படத்தின் வெற்றி, வசூலைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடம் உள்ளது. அதே சமயம், 'துரந்தர் 2' படத்தின் போட்டியையும் இப்படம் சமாளித்தாக வேண்டும்.
துரந்தர் 2
ஆதித்ய தர் இயக்கத்தில், ஷஷ்வத் சச்தேவ் இசையமைப்பில், ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம்.
இந்தப் படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி 1300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. கடந்த வருடத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த ஒரே படம். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம். ஓடிடி தளத்திலும் தற்போது சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது.இந்தப் படத்தை முதல் பாகம் போல ஹிந்தியில் மட்டும் வெளியிடாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்பா
ஷிவ் ராவைல் இயக்கத்தில், ஆலியா பட், ஷர்வரி, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக இந்தப் படம் உருவாகிறது.
இரண்டு பெண் சூப்பர் ஏஜன்ட்களின் ஆக்ஷன்தான் இந்தப் படம். ஆலியா, ஷர்வரி அந்த ஏஜன்ட்களாக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். படத்தின் விஎப்எக்ஸ் வேலைகள் முடிவடைய தாமதம் ஆனதால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ஆலியா பட் தென்னிந்தியாவிலும் பிரபலமானார். அதனால், இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
பெத்தி
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர், ஷிவராஜ்குமார் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'பெத்தி'.
'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து, ஹாலிவுட் வரையிலும் பிரபலமானார் ராம் சரண். அடுத்து மிகப் பெரும் நம்பிக்கையில் தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்ஜர்' படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனால், மீண்டும் தெலுங்கு இயக்குனர்கள் பக்கமே போய்விட்டார்.
'உப்பெனா' என்ற ஒரே ஹிட் படத்தை இயக்கிய புச்சிபாபு சனா சொன்ன கதை அவரை வெகுவாகக் கவர்ந்து, அதில் நடிக்க ஆரம்பித்தார். படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பான் இந்தியா வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ராம் சரண். ஏப்ரல் 30ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, எஸ்ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம்.
2023ல் வெளிவந்து 600 கோடிக்கும் மேல் வசூலித்த வெற்றிப் படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த 'லால் சலாம், வேட்டையன், கூலி' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு பெரும் வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. அதை 'ஜெயிலர் 2' படம் நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் வெளியீடு பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருந்தாலும் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் இப்படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
ராமாயணா - பாகம் 1
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏஆர் ரகுமான், ஹன்ஸ் ஜிம்மர் இசையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில், உருவாகி வரும் படம்.
ராமாயணக் கதையை இதுவரை பல மொழிகளில், பலர் படமாக்கி இருக்கிறார்கள். காலத்திற்குத் தகுந்தபடியான தொழில்நுட்ப அம்சங்களுடன் அந்தப் படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 'ராமாயணா' இந்தக் கால விஎப்எக்ஸ், ஏஐ தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. இதற்காக ஹாலிவுட் குழு உழைத்து வருகிறது. இதுவரையில் வந்த ராமாயணத் திரைப்படங்களை விடவும் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டணி அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற விதத்தில் அமைந்துள்ளது இப்படத்திற்குப் பலம்.
இந்த வருடம் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.
இந்தப் படங்கள் தவிர மேலும் சில படங்கள் பான் இந்தியா என்ற அடையாளத்துடன் வெளியாகலாம். சில படங்கள் சில மொழிகளில் மட்டுமே டப்பிங் செய்யப்பட்டும் வரலாம்.
இந்தப் படங்கள் அனைத்துமே 1000 கோடி வசூலைப் பெறும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த நம்பிக்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயம் நடக்கும்.