இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்...
நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா இருவரும் இணைந்து 80 காலகட்டத்தில் ரங்கா, மூன்று முகம், போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஊர் காவலன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது ராதிகா அளித்த ஒரு பேட்டியில் ரஜினியுடன் இரவில் பைக் ரைட் சென்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளதர்.
அவர் கூறியதாவது, அந்த அமைதியான இரவில், ரஜினிகாந்த் தனது பைக்கில் என்னை அழைத்துக் கொண்டு சென்னை நகரைச் சுற்றி காட்டினார். அப்போது தான் சினிமாவில் பிரபலம் ஆவதற்கு முன்பு, தான் சந்தித்த கஷ்டமான நாட்களை குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பல இடங்களை காட்டி, நான் இங்கே தான் தூங்குவேன், இந்த இடத்தில் தான் தங்கியிருந்தேன், இங்கு தான் சாப்பிடுவேன் என்றார்.
பலர் வாழ்க்கையில் போராடுகிறார்கள், ஆனால், ரஜினிகாந்த் வலி, பொறுமை மற்றும் கடின உழைப்பின் மூலம் உண்மையாகவே தரைமட்டத்திலிருந்து உயர்ந்து வந்தவர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் திடீர் திருப்பமாக , நாங்கள், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அதிவேகமாக வந்து எங்களுக்கு முன்னால் குறுக்கே நின்று வழிமறித்தது. ஒரு நிமிடம் நான் பயந்து விட்டேன்.
அந்த காரில் இருந்து இறங்கியது வேறு யாருமில்லை, லதா ரஜினியின் சகோதரரும், இசையமைப்பாளர் அனிரூத்தின் அப்பாவான ரவி ராகவேந்திரா தான். ரஜினி ஏதோ ஒரு பெண்ணுடன் நள்ளிரவில் ரகசியமாகச் செல்கிறார். எனத் தவறாகப் புரிந்து கொண்டு, எங்களைத் தடுத்து நிறுத்த துரத்தி வந்திருக்கிறார். ஆனால், லதாவிற்கு ஏற்கனவே நான் ரஜினியுடன் உள்ளேன் என்பது தெரியும். இந்த விவரம் தெரியாமல் ரவி ராகவேந்திரா எங்களைத் துரத்தி வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.