உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்…

படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்…

தமிழ் சினிமா உலகம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது. நல்ல படங்கள் வரவில்லையா அல்லது மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லையா என்ற இரு வேறு கேள்விகள் எழுகின்றன.

முழு ஆண்டுத் தேர்வுகள் ஒரு பக்கம், டி 20 கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம், சட்டசபைத் தேர்தல் பரபரப்பு இன்னொரு பக்கம் என தியேட்டர்களுக்குக் கடும் சவால் எழுந்துள்ளது.

பொங்கலுக்குப் பிறகு குறிப்பிடும்படியான முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. அடுத்து தேர்தல் முடிந்த பிறகுதான் வரும் என்ற சூழல் நிலவி வருகிறது. வாராவாராம் நான்கைந்து சிறிய படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றைப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட மக்கள் குறைவாகத்தான் தியேட்டர்கள் பக்கம் வந்துள்ளார்கள்.

நேற்று வார நாள் என்பதால் பல சிங்கிள் தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்துள்ளார்கள். சென்னையில் கூட அப்படியான நிலையைப் பார்ப்பது அதிர்ச்சியாக உள்ளது. சரியான இடைவெளியில் படங்கள் இல்லாதது, குடும்பத்தினர் அனைவரும் வந்து பார்க்கும்படியான படங்கள் வராதது ஆகியவையும் சிங்கள் தியேட்டர்களுக்கு இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மற்ற மொழிப் படங்களையும் திரையிட்டு எப்படியோ தப்பித்து வருகிறார்கள். அடுத்தடுத்து சில சிறிய படங்கள்தான் வர உள்ளதால் அடிக்கடி சிங்கிள் தியேட்டர்களின் ஓட்டம் 'பிரேக்' ஆவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !