ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு
பாரி இளவழகன் நடிப்பு, இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான படம் ஜமா. திருவண்ணாமலை மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக சொன்னது, பல்வேறு விருதுகளை அள்ளியது. அதைத் தொடர்ந்து பாரி இளவழகன், இயக்கி நடிக்கும் படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி படங்களை இந்த நிறுவனம் தயாரித்து இருந்தது.
பெயரிடப்படாத இந்த படத்தில் பாரி ஜோடியக ரம்யா ரங்கநாதன் நடிக்கிறார். இவர் தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
'மண்டேலா', 'மாவீரன்' புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, 'அருவி', 'சக்தி திருமகன்' பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடைக்கு படம் ரிலீஸ் ஆகிறது.