பிளாஷ்பேக்: கொச்சின் ஹனீபாவை தமிழுக்கு அழைத்து வந்த கருணாநிதி
தமிழ் சினிமாவில் வி.எம்.சி.ஹனீபா என்ற பெயரில் நடிகராக வலம் வந்தவர் மலையாள இயக்குனர் கொச்சின் ஹனீபா. மலையாளம் கலந்த அவர் தமிழ் பேச்சும், டி.எஸ்.பாலையா பாணியிலான அவர் நடிப்பும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட இங்கேயே முக்கிய நடிகராகிவிட்டார்.
மலையாளத்தில் படம் இயக்கி கொண்டிருந்த ஹனீபாவை தமிழுக்கு அழைத்து வந்தது கருணாநிதி. ஹனீபா இயக்கிய மலையாள படமான 'மூணு மாசங்களுக்கு மும்பு' என்ற படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது. இதனால் அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கருணாநிதியின் பூம்புகார் புரொடக்ஷன் நிறுவனம் வாங்கியது. படத்தை பார்த்த கருணாநிதி, அந்த படத்தின் கதையை சற்று தமிழுக்கு ஏற்றார்போல மாற்றி வசனமும் எழுத ஒப்புக் கொண்டார். படத்தை இயக்க இங்குள்ள இயக்குனர்கள் சிலர் பரிசீலிக்கப்பட்டபோது அவரையே இயக்க சொல்லுங்கள் என்று கூறிவிட்டார் கருணாநிதி.
இப்படித்தான் ஹனீபா தமிழுக்கு வந்தார். அந்த படம் தான் பாசப் பறவைகள். சிவகுமார், லட்சுமி, மோகன், ராதிகா நடித்தனர். அதன்பிறகு பாடாத தேனீக்கள், பகலில் ஒரு பவுர்ணமி, பிள்ளை பாசம், வாசலிலே ஒரு வெண்ணிலா, கடலோர காதல் போன்ற படங்களை இயக்கினார். என்றாலும், தமிழ்நாட்டில் அவர் நடிகராகவே அதிகம் புகழ்பெற்றார்.