மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம்
இந்தியத் திரையுலகத்தில் சினிமா மூலம் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்கள் ஒரு சிலர்தான். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படங்களைத் தயாரிப்பது, பட வினியோகம் செய்வது என சிலர் செய்து வருகிறார்கள். சமீப காலங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆரம்பிப்பதில் சிலர் முதலீடு செய்து வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு சில வருடங்களுக்கு முன்பு 'எஎம்பி சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை ஹைதராபாத்தில் திறந்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் அதே பெயரில் பெங்களூருவில் மிகப் பெரிய திரை கொண்ட டால்பி சினிமா திரையுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறந்தார்.
தெலுங்குத் திரையுலகத்தின் மற்றொரு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் 'ஏசியன் அல்லு சினிமாஸ்' என்ற பெயரில் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் என்ற இடத்தில் ஏற்கெனவே மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அடுத்து கொகபேட் என்ற இடத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை மார்ச் 18ல் திறக்க உள்ளார்கள்.
75 அடி அகலம் கொண்ட டால்பி சினிமா தியேட்டர் ஒன்றும் அதில் அடங்கும். ஆசியாவிலேயே மிகப் பெரிய டால்பி சினிமா தியேட்டராக அது திறக்கப்பட உள்ளது. 644 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஹைதராபாத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் என்ற பெருமையுடன் ஆரம்பமாகிறது. தியேட்டரை முறைப்படி நாளை மார்ச் 12 அன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்க உள்ளார். அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிக வசூலைக் குவித்து வரும் தெலுங்குத் திரையுலகத்தின் மையமான ஹைதரபாத் நகரில் பிரம்மாண்ட திரை கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்கள் கிடையாது. அந்தக் குறையை அல்லு சினிமாஸ் வளாகத்தின் டால்பி சினிமா தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.