பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணிம் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட, ஆனால் அவர் டப்பிங் பேசியது பெரும்பாலும் கமல்ஹாசனுக்குத்தான். கமலின் தமிழ் படங்கள் தெலுங்கில் வெளியானாலோ, அல்லது அவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் வெளியானாலோ எஸ்.பி.பாலசுப்ரமணிம்தான் கமலுக்கு டப்பிங் பேசுவார். அதில் முக்கியமான படம் 'சிப்பிக்குள் முத்து', இது தெலுங்கு படம்தான் ஆனால் தமிழில் கமலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான டப்பிங் பேசினார்.
மென்மையான குரல் வளம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வில்லனுக்கும் டப்பிங் பேசினார். 'அர்ஜுன்' என்ற ஹிந்திப் படம்தான் தமிழில் 'சத்யா' என்று ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக கிட்டி நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கு சரியாக இருந்தது. ஆனால் குரல் மேட்ச் ஆகவில்லை. இதனால் கமல் கேட்டுக் கொண்டதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் பேசினார். தனது குரலை சற்று வித்தியாசப்படுத்தி அவர் பேசியதால் அது டப்பிங் வாய்ஸ் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே படத்தில் 'வளையோசை கலகலவென' என்கிற பாடலை லதா மங்கேஷ்கருடன் இணைந்து கலகலவென பாடி இருந்தார். அமலா நாயகியாக நடித்திருந்தார். கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் இது. கமல்ஹாசனே தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் கேங்ஸ்டர் படம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.