ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்?
விஜய்யின் கடைசி படமாக உருவான படம் 'ஜனநாயகன்'. எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்த படம். இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம். ஆனால், தணிக்கை சான்றிதழ் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
சமீபத்தில் இப்படத்தின் தணிக்கை முடிவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அந்நிறுவனம் 'ஜனநாயகன்' படத்துடன் 'டாக்சிக், கேடி தி டெவில்' ஆகிய இரண்டு கன்னட பான் இந்தியா படங்களைத் தயாரித்துள்ளது. இவற்றில் யஷ் நடித்த 'டாக்சிக்' படத்தின் வெளியீடு மார்ச் 19ம் தேதியிலிருந்து ஜூன் 4ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. துருவ் சர்ஜா நடித்த 'கேடி தி டெவில்' படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக 'ஜனநாயகன்' படம் வெளியாக வாய்ப்பில்லை என்பதுதான் ஏற்கெனவே வெளியான தகவல். தேர்தல் முடிந்த பிறகும் அப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 'கேடி தி டெவில்' படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகளும், வெளியான பின்னர் தொடரும் வேலைகளும் மே மாதத்தின் இரண்டு வாரங்களுக்கு நீண்டுவிடும்.
அதன் பிறகு ஜூன் 4ல் வெளியாக உள்ள 'டாக்சிக்' படத்திற்கான முன் வெளியீட்டு வேலைகள் ஆரம்பமாகிவிடும். அதற்கு மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் சரியாகப் போகும். ஆங்கிலம் முதற்கொண்டு அந்தப் படம் உலக அளவில் வெளியாக இருப்பதால் ஜூன் மாதம் முழுவதும் கூட அதற்கான புரமோஷன் வேலைகள் நடக்கலாம்.
இந்த இரண்டு படங்களுக்கான வேலைகள் முடிந்த பிறகுதான் 'ஜனநாயகன்' வெளியீட்டு வேலைகளைப் பார்க்க முடியும். அப்படி பார்த்தால் படம் ஜூலையில் தான் வெளியாக அதிகம் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஓடிடி உரிமைகள், வெளிநாட்டு உரிமைகளை வாங்கியவர்கள் பின்வாங்கி விட்டார்கள் என்று ஒரு தகவல் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால் தற்போது வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவற்றைப் பேசி முடிக்காமல், குறிப்பாக ஓடிடி உரிமையைப் பேசி முடிக்காமல் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதுதான் தற்பேதைய கோலிவுட் வட்டாரத் தகவல்.