சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல்
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் கே.மது டைரக்ஷனில் வெளியான ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 35 வருட காலகட்டத்தில் இதுவரை ஐந்து பாகங்களாக வெளியாகி இருக்கிறது. இந்த ஐந்து பாகங்களிலும் சேதுராம ஐயர் என்கிற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார். இந்த ஐந்து பாகங்களுக்கும் பிரபல கதாசிரியர் எஸ்.என் சுவாமிதான் கதை எழுதியுள்ளார். கடந்த 2022ல் சிபிஐ ; தி பிரெய்ன் என இதன் ஐந்தாம் பாகம் வெளியானது. ஆனாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.
இந்த நிலையில் தான் இந்த 5 பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “நீங்கள் எல்லோரும் சிபிஐ படத்தின் ஐந்து பாகங்களையும் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாகவா? ஐந்து பாகங்களையும் ரசித்திருக்கிறீர்களா? ஆறாவது பாகத்தை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நிச்சயம் அது விரைவில் வருகிறது. வெகு விரைவில் அந்த படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். இது மலையாள ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.