பிளாஷ்பேக்: நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம், டி ஆர் ராஜகுமாரியின் கடைசிப் படம் கவிஞர் கண்ணதாசனின் “வானம்பாடி”
தமிழ் திரையுலகின் தலைசிறந்த கவிஞர்களில் முதன்மையானவரும், தமிழகத்தின் அரசவைக் கவிஞராக அரியணையை அலங்கரித்தவருமான கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலாசிரியராக மட்டுமின்றி, கதாசிரியராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, இலக்கியவாதியாக, அரசியல்வாதியாக, நடிகராக என பல்துறை வித்தகராய் அறியப்பட்டவர். “மாலையிட்ட மங்கை”, “சிவகங்கைச் சீமை”, “கவலை இல்லாத மனிதன்” போன்ற திரைப்படங்களைத் தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். அப்படி அவர் தயாரித்த ஒரு வெற்றித் திரைக்காவியம்தான் “வானம்பாடி”.
“சேஷ் பரிச்சாய்” என்ற வங்கமொழி திரைப்படத்தை “வானம்பாடி” என தமிழுக்காக மறு உருவாக்கம் செய்து, தனது “கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து வெளியிட்டார் கவிஞர் கண்ணதாசன். அவரது சொந்தப்படம் என்பதால் பாடல்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் இசையில் “கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்”, “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்”, “தூக்கணாங் குருவிக் கூடு”, “ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்”, “ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்”, “ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக” என இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பல எப் எம் ரேடியோக்களில் இரவு நேரங்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்த வண்ணம் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற மற்றுமொரு பாடலான “யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்” என்ற பாடலில் தனது அற்புதமான நாட்டியத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ஜோதிலட்சுமி.
நடிகை தேவிகா இரட்டை வேடமேற்று நடித்திருக்க, எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஷீலா, டி ஆர் ராமச்சந்திரன், புஷ்பலதா, ஆர் எஸ் மனோகர், எஸ் வி சகஸ்ரநாமம், வி எஸ் ராகவன், ஜாவர் சீதாராமன், ஓ ஏ கே தேவர், மாஸ்டர் கமல்ஹாசன் என ஒரு நட்சத்திரத் திரளே நடித்திருந்த இத்திரைப்படம்தான் பழம்பெரும் நடிகை டி ஆர் ராஜகுமாரி நடித்து வெளிவந்த அவரது கடைசி திரைப்படமாகவும் அமைந்திருந்தது.
மேலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்” என்ற பாடலில் “அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்” என கவிஞர் கண்ணதாசன் கடவுளை வஞ்சிப்பது போல் எழுதியிருந்ததை, தீவிர இறை நம்பிக்கையாளரான பாடகர் டி எம் சௌந்தரராஜன் பாட மறுக்க, பின்னர் அந்த வரிகளை “அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்” என மாற்றி எழுதித் தந்தார் கவிஞர் கண்ணதாசன். இப்படி பல சிறப்புக்களை உள்ளடக்கிய இத்திரைக் காவியம் 1963ம் ஆண்டு மார்ச் 9 அன்று வெளிவந்து, வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.