ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை
நடிகர் விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை சமயத்திலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சாரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இப்போது வரை நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருக்கிறது. அதனால் படம் எப்போது வெளியாகும் என்று தெரியாத இந்த சூழலில் அதிர்ச்சி தரும் விதமாக இந்த மொத்த படத்தின் ஹச் டி பிரிண்ட் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது. இது படக்குழுவினர், திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகில் இருந்தும் இந்த செயலை கண்டித்தும் விஜய்க்கு ஆதரவாகவும் பல நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆவர்களில் நடிகர் சிரஞ்சீவியும் ஒருவர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இந்த புதிய பிரச்சினையால் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (ஏப்-11) நடக்க இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரணம் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தையும் தயாரிக்கிறது. பாபி கொல்லி இயக்கும் இந்த படத்திற்கு முன்கூட்டியே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருந்த நிலையில் தான் சிரஞ்சீவிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜையை நடத்தி விட்டு ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஜனநாயகன் ஆன்லைனில் லீக் ஆனதால் இந்தப் படத்தின் பூஜை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.