தொழிலதிபர் ஆனார் அனிருத்
'கொலை வெறி' பாடல் மூலம் இளம் தலைமுறையின் மனதில் இடம் பிடித்த அனிருத் ரவிச்சந்தர். தொடர்ந்து தனது இசை வெற்றியின் மூலம் அவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இதன் அடுத்தகட்டமாக தனது இசை செல்வாக்கு, ரசிகர்கள் பலம் இவற்றின் அடிப்படையில் தொழில் அதிபராகவும் மாறி வருகிறார்.
முதலில் 'அல்புகர்க் ரெக்கார்ட்ஸ்' என்ற இசை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பல முன்னணி இசை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. வெறும் சம்பளம் என்பதை தாண்டி லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள் அமைந்தன.
தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைந்து 'லோகா லோக்கா' என்ற உயர்ரக மதுபான நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார். அமெரிக்க மதுபான நிறுவனமாக 'லோகா லோக்கா' ஆசியாவில் கால்பதித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்ட இந்த நிறுவனம் தற்போது அனிருத் மூலம் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.
இது தவிர 'டிகன்ஸ்ட்ரக்ட்' என்ற சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆகியுள்ளார்.
ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் பெறும் அனிருத், விளம்பர படங்கள், இசை நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டுக்கு பலகோடி சம்பாதித்து வருகிறார். இன்னொரு இசை அமைப்பாளர் எப்போது வேண்டுமானாலும் தன் இடத்தை பிடிக்கலாம் என்பதால் தற்போது தனது வருமானத்தை முதலீடாக மாற்றி வருகிறார்.