பிளாஷ்பேக்: 'கல்யாணி'யை கண்டு அஞ்சிய பெண்கள்
சினிமாவிற்கும், பெயருக்கும் நிறைய பொருத்தங்களும் சென்டிமெண்டும் உண்டு. தயாரிப்பாளரும், நடிருமான பாலாஜி தனது பட ஹீரோக்களுக்கு ராஜா என்றுதான் பெயர் வைப்பார், எஸ்.ஏ.சந்திரசேகர் தனது படங்களின் ஹீரோக்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார். பாரதிராஜா தனது நாயகிகளுக்கு 'ஆர்' வரிசையில்தான் பெயர் வைப்பார்.
ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் ஒரு பெயரை கண்டு பயந்தார்கள் அது 'கல்யாணி'. புகழ்பெற்ற 'பராசக்தி' படத்தின் நாயகியின் பெயர் கல்யாணி. இந்த கேரக்டரில் ஸ்ரீரஞ்சனி நடித்திருந்தார். நான்கு சகோதரர்கள் இருந்தும் ஒரு பிச்சைக்காரி போன்று வாழ்ந்த கேரக்டர் கல்யாணி.
'கல்யாணிக்கு கல்யாணம்' என்ற படத்தில் படிப்பறிவில்லாத கல்யாணியை திருமணம் செய்து கொள்ளும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் குடும்பம் கல்யாணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும், சகோதரர் பிரேம் நசீர் பணக்கார பெண்ணை மணந்து கல்யாணியை கைவிட்டு விடுவார். இந்த படத்தில் கல்யாணியாக மைனாவதி நடித்திருந்தார்.
'கடன் வாங்கி கல்யாணம்' படத்தில் கடன் வாங்கி தனது மகள் சாவித்ரியை ஜெமினி கணேசனுக்கு மணம் முடித்து வைப்பார் தந்தை டி.எஸ்.பாலைய்யா. அவரை ஜெமினி கணேசன் உள்ளிட்ட டீம் எப்படி திருத்துகிறது என்பது கதை. இந்த படத்தில் சாவித்ரி கேரக்டருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கல்யாணி. ஆனால் பின்னர் கேரக்டர் பெயர் மஞ்சுளா என்ற மாற்றப்பட்டது.
'கல்யாணி' என்று பெயர் வைத்தாலே கஷ்டகாலம்தான் என்று கருதிய பெண்கள் அந்தக் காலத்தில் தங்கள் மகள்களுக்கு கல்யாணி என்று பெயர் வைப்பதை தவிர்த்தார்கள். பிற்காலத்தில் இது மறைந்து போனது. பராசக்திக்கு முந்தைய காலத்தில் நல்ல தங்காள் என்று பெயர் வைப்பதையும், சாவித்ரி என்று பெயர் வைப்பதையும் தவிர்த்தார்கள்.
பின்னாளில் டி.ராஜேந்தர் 'என் தங்கை கல்யாணி' என்ற படத்தை இயக்கினார். இதிலும் கல்யாணி கஷ்டப்படும் ஒரு பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டார். சுதா ஸ்வர்ணலட்சுமி என்பவர் கல்யாணியாக நடித்திருந்தார். கல்யாணி கேரக்டர் எப்படி இருந்தாலும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது.