துல்கர் சல்மானை சந்திப்பதற்காகவே சினிமாவில் நுழைந்தேன் : பரியா அப்துல்லா
தெலுங்கில் கடந்த 2021ல் வெளியான ஜதி ரத்னலு படத்தில் அறிமுகமானவர் நடிகை பரியா அப்துல்லா. தொடர்ந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் காயப்பட்ட சிங்கம் என்கிற படத்தில் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் தருண் பாஸ்கர் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் துல்கர் சல்மானுடன் பரியா அப்துல்லாவும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பரியா அப்துல்லா பேசும்போது, சல்மானை சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன் என்று துல்கர் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் முதன் முதலாக துல்கர் சல்மான் படம் என பார்த்தது சார்லி தான். அந்த படத்தில் கதாநாயகியாக நான் என்னையே நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு சினிமா துறையில் நுழைந்து எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். என்னுடைய முதல் படமான ஜதி ரத்னலு வெளியான போது அது குறித்த டீசர் ஒன்றை துல்கர் சல்மானுக்கு டேக் செய்தேன். அவரும் அதற்கு பதிலளித்ததை பார்த்ததும் சந்தோஷத்தில் எனது மொபலையே மேலே தூக்கி போட்டேன். இதோ இப்போது அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவருடன் நானும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார் பரியா அப்துல்லா.