நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் இடையே மோதல் : திரைப்படங்கள் தயாரிப்பில் சிக்கல் ஏற்படும் அபாயம்
நடிகர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திரைப்படங்கள் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நடிகர்களை வழிக்கு கொண்டு வர, தொடர் வேலை நிறுத்தம் செய்யலாமா என, தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதுமே, தயாரிப்பு செலவு, லாபம் போன்றவற்றை கணக்கிட்டு, விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், சினிமாவை பொறுத்தவரை, படம் முழுதும் உருவாகி தியேட்டருக்கு வந்த பின்பே, அதன் வசூல் எவ்வளவு என, தெரியவரும். படம் நன்றாக ஓடினால் தான் லாபம்; இல்லை எனில் நஷ்டமே.
தலை தப்பும்
ஆனால், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே, தங்களின் சம்பளத்தை பெற்று விடுவர். ஒட்டுமொத்த தயாரிப்பு செலவை தாண்டி, படம் வசூலித்தால் மட்டுமே, தயாரிப்பாளர் தலை தப்பும். நடிகர்களின் அதிகப்படியான சம்பளம், தயாரிப்பு செலவு போன்ற காரணங்களால், தமிழ் திரையுலகம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், மற்ற மொழி படங்களை விட, தமிழில் வெற்றி படங்களை கேட்டால், விரல் விட்டு எண்ணி விடலாம். முதன் முதலில், ஹிந்தியில் வெளியான, டங்கல் படம் 1,000 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்பின்னரே, ஜவான், தெலுங்கில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., கல்கி, கன்னடத்தில் கே.ஜி.எப், காந்தாரா போன்ற படங்கள், 1,000 கோடி ரூபாய் வசூலை தொட்டுள்ளன. தமிழ் திரையுலகில் தயாரிக்கப்பட்ட படங்களில், அந்த மாதிரி ஒன்று கூட இல்லை. மாறாக நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மட்டும், கோடிகளில் ஏறுமுகத்தில் உள்ளது. அதேபோல தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.
ரூ.500 கோடி
சிறு படமாக இருந்தாலும், குறைந்தபட்சம் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஸ்டார் வேல்யூ நடிகர் என்றால், குறைந்தபட்சம், 200 முதல் 500 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. இப்படங்களின் வசூல் என்று பார்த்தால், போட்ட முதலீடே கிடைக்காத நிலை உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், 'நடிகர்கள் தங்களின் சம்பளத்தை ஆரம்பத்திலேயே பெறாமல், படங்களின் லாபத்தின் அடிப்படையில் பெற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்கவில்லை.
இதுகுறித்து இருதரப்பினரும் மாறி, மாறி அறிக்கை விட்ட நிலையில், நேற்று முன்தினம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதை நடிகர் சங்கம் ஏற்காத நிலையில், வேலை நிறுத்தத்தால், 33 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடிகர் சங்கம் தரப்பில், 'நடிகர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் மொத்த சம்பளத்தில், 10 சதவீதம் தரவேண்டும்.
'படப்பிடிப்பில், 25 சதவீதம் முடிந்ததும், 15 சதவீத சம்பளம்; பாதி படப்பிடிப்பு முடிந்ததும், 15 சதவீத சம்பளம், 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்ததும், 10 சதவீதம்; முழு படப்பிடிப்பு முடிந்ததும், 10 சதவீதம்; பின்னணி குரல் முடியும் முன், மீதி, 40 சதவீதம் சம்பளம் வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
அபாயம்
மேலும், நாள் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு, 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்த தினமே, சம்பளம் வழங்க வேண்டும். மீதி, 30 சதவீதத்தை டப்பிங்கிற்கு முன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கவில்லை. அத்துடன், நடிகர்களை வழிக்கு கொண்டு வர, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து, ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பிரச்னையால் திரையுலகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில், சம்பள உயர்வு கோரிக்கையை, தெலுங்கானா முதல்வர் தலையிட்டு தீர்த்து வைத்தது போல, தமிழ் திரைத்துறை விவகாரத்தில், புதிய அரசு அமைந்ததும், தமிழக அரசு கூட்டுக்குழு அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, திரையுலகினர் வலியுறுத்தியுள்ளனர்.
அடம் பிடிக்கும் நடிகர்களுக்கு தடை?
திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி: தேர்தல் முடிவுகள் வெளியான பின், நடிகர் சங்கத்தினர் பேச்சுக்கு வருவதாகக் கூறியுள்ளனர். வரும், 6ம் தேதி பேச்சு நடத்தி முடிவு எட்டப்படும். தயாரிப்பாளர்களாகிய நாங்கள், லாபத்தின் அடிப்படையிலேயே சம்பளம் என்பதில் உறுதியாக உள்ளோம். தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே லாப பகிர்வு அடிப்படையில் தான், நடிகர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத நடிகர்களின் படங்களை தயாரிப்பதில்லை என, அங்குள்ளவர்கள் முடிவு எடுத்துள்ளனர். ஒரு படத்தை தயாரித்து வெளியான பின், அதில் வரும் லாபத்தை பகிர்வது தான், திரையுலகில் அனைவருக்கும் பயன் தரும். இவ்வாறு அவர் கூறினார்.