உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ரஜினிக்கு மாமியாராக மறுத்த வைஜெயந்தி மாலா

பிளாஷ்பேக்: ரஜினிக்கு மாமியாராக மறுத்த வைஜெயந்தி மாலா

ரஜினி நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான படம் 'மாப்பிள்ளை'. இதில் ரஜினியுடன், அமலா, ஸ்ரீவித்யா நடித்திருந்தார்கள். ராஜசேகர் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். இது சிரஞ்சீவி நடித்து, தெலுங்கில் வெற்றி பெற்ற, 'அத்தகு யமுடு அம்மாயி மொகுடு' என்ற படத்தின் ரீமேக். மாப்பிள்ளை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் சிரஞ்சீவி நடித்திருப்பார்.

கோடீஸ்வர மாமியாருக்கும், ஏழை மருமகனுக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி மாமியாராக வாணிஸ்ரீ தெறிக்கவிட்டிருப்பார். 'மாப்பிள்ளை' படத்திலும் அதைப்போன்ற ஒரு மாமியாரை தேடினார்கள். பழம்பெரும் நடிகையாகவும் இருக்க வேண்டும். வில்லித்தனத்திற்கும் பொருந்த வேண்டும் என்று தேடி கடைசியாக வைஜெயந்தி மாலாவை நடிக்க வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் வைஜெயந்திமாலா கதையை கேட்டுவிட்டு நடிக்க மறுத்து விட்டார். 'ரஜினி என் மகன் மாதிரி, அவரை திட்டியோ, எதிர்த்து பேசியோ என்னால் இயல்பாக நடிக்க முடியாது. அப்படி நடித்தால் அது செயற்கையாக இருக்கும். சினிமாவில்கூட ரஜினியை திட்ட மாட்டேன்' என்று கூறிவிட்டார்.

அதன்பிறகு ஸ்ரீவித்யாவை டெரர் மாமியாராக்கினார்கள். அவருடைய நடிப்பு வாணிஸ்ரீ அளவுக்கு பேசப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !